Published : 20 Jun 2021 05:42 PM
Last Updated : 20 Jun 2021 05:42 PM
மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக முதல்வரின் கடுமையான அத்துமீறலுக்கு கண்டனம் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூன் 20) வெளியிட்ட அறிக்கை:
"கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி விரைவில் தொடங்கும் என, அம்மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்திருப்பது கடுமையான அத்துமீறலாகும்.
காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பான காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்புக்கும், இதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கும் எதிராக, கர்நாடக முதல்வர் பேசுவது அரசியலமைப்பு சாசன நெருக்கடியை உருவாக்கும் செயலாகும்.
ஒரு மாநில மக்களை மற்றொரு மாநில மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு பகை ஏற்படுத்தும் தீய உள்நோக்கம் கொண்டது. கூட்டாட்சி கோட்பாட்டையும் மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளையும் சிதைக்கும் செயலாகும்.
கர்நாடக முதல்வரின் அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் பிரதமர் மோடி தலையிட்டு தடுத்து, மேகதாது பகுதியில் தடுப்பணை கட்டுவதை நிரந்தரமாக கைவிடச் செய்ய வேண்டும்.
இதில், மத்திய அரசு அலட்சியம் காட்டுவதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி மேகதாது அணை கட்டும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட வலியுறுத்தி தமிழகம் ஒன்றுபட்டு போராடும் என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த அனைவரும் ஒன்றுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறது".
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT