Published : 20 Jun 2021 05:07 PM
Last Updated : 20 Jun 2021 05:07 PM
தமிழகத்தில் ஒருதுரும்பு கூட குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடக்கிறது என, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.
மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கருவனூரில் புதிய மின்மாற்றியை வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று (ஜூன் 20) திறந்து வைத்தார். ஆட்சியர் அனிஷ்சேகர் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதன்பின், அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கடந்த காலத்தில் மின்தடை ஏற்பட்டுள்ள இடங்களில் தற்போது தேவையின் அடிப்படையில், மின்மாற்றிகள், 110 கேவி துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருவனூர் பகுதி மக்களின் கோரிக்கையின் படி, ரூ.3 கோடியில் துணை மின்நிலையம் அமைக்கப்படும். இது அமையும்போது, இப்பகுதியில் மின்தடை இருக்காது.
மின்சார வழித்தடங்களை பராமரிக்காத காரணத்தால், ஆங்காங்கே சில இடங்களில் மின்தடை இருக்கலாம். எதிர்க்கட்சியினர் இதை தவறாக பிரச்சாரம் செய்கின்றனர். மின்சாரம் போதிய அளவுக்கு இருக்கிறது. தேவையின் அடிப்படையில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
இன்னும் 10 நாட்களில் பழுது நீக்கிய பிறகு மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மின் விநியோகம் சீரமைக்கப்படும் என, மின்வாரிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தெர்மாகோல் மூலம் தண்ணீரை மறைத்தவர் செல்லூர் கே.ராஜூ. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மதுரை மாவட்டத்தில் கரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தற்போது, முதல்வரின் நடவடிக்கையால் 140-க்கு கீழ் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
அதிமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. மத்திய அரசிடம் நெருக்கமாக இருந்து. நீட் போன்ற பிரச்சினைகளை அவர்கள் தீர்க்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்து 45 நாள் கூட ஆவதற்குள், எங்களை குறை சொல்கின்றனர்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, ரூ.5,000 கரோனா நிதி வழங்க வலியுறுத்தினோம். ரூ.1,000 மட்டுமே கொடுத்தனர். நாங்கள் வந்தபின், எஞ்சிய ரூ.4,000, மளிகை பொருட்கள் வழங்கியுள்ளோம்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்லும் குற்றச்சாட்டுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது. ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது. இது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் இது போன்று ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா?
ஜனநாயக முறைப்படி, சட்டப்பேரவை கூட்டம் நடக்கும் என, முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் ஆலோசிக்க எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை அழைக்கவில்லை. நாங்கள் 'வா, வா' என, அழைத்தாலும், அவர்கள் வருவதில்லை.
தற்போது, மதுரை மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏ தொகுதியிலும் தடுப்பூசிகள் பகிர்ந்து கொடுத்து செலுத்தப்படுகிறது. ஒரு துறும்பு கூட குறை சொல்ல முடியாத வகையில், தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. அவர்கள் சொல்லும் குறைகளுக்கெல்லாம் பதிலளிப்பது நடைமுறையாகாது.
கடந்த ஒரு மாதத்தில் மதுரை மாவட்டத்தில் 7 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன. துணை மின்நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது.
ரேஷன் கடை பிரச்சினைகளை தீர்க்க அமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தி, தவறு நடக்குமிடங்களில் நடவடிக்கை எடுத்துள்ளார். குறைகளை மக்களிடமும், உங்களிடமும் (பத்திரிகையாளர்கள்) கேட்டு தீர்க்கிறோம். மக்கள் பாராட்டும் ஆட்சியை நடத்துகிறோம். குறை இருக்க வாய்ப்புமில்லை, தேவையுமில்லை.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட யாராக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்".
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT