Published : 20 Jun 2021 01:18 PM
Last Updated : 20 Jun 2021 01:18 PM

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு; 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இல்லை

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

ஜூன் 28 வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில், வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று (ஜூன் 20) மட்டும் 8,183 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் 468 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 31,015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 180 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நாளையுடன் (ஜூன் 21) ஊரடங்கு நிறைவடயவுள்ள நிலையில் ஜூன் 28 வரை ஊரடங்கை நீட்டித்து, முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 20) உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1 - (11 மாவட்டங்கள்)

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்

வகை 2 - (23 மாவட்டங்கள்)

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.

வகை 3 - (4 மாவட்டங்கள்)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்

மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுள், வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகை-1 இல் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்:

* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

* மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர், எனினும் இவ்வகைக் கடைகள் திறக்க அனுமதியில்லை.

* மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் (விற்பனைக் கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.

* வேளாண் உபகரணங்கள், பம்பு செட் (Pump set) பழுது நீக்கும் கடைகள் (விற்பனைக் கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்".

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x