Published : 20 Jun 2021 12:01 PM
Last Updated : 20 Jun 2021 12:01 PM
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தாண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை கரோனா காரணமாக, சிபிஎஸ்இ ரத்து செய்தது. இதையடுத்து, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தமிழக அரசும் ரத்து செய்தது. ஆனால், நீட் தேர்வு இந்தாண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், அரசுப்பள்ளிகளில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பது மாணவர்கள் மனதில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த நொடி வரை நீட் தேர்வு இருக்கிறது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, நீட் பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளை பெற்று வருகின்றது.
இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 20) தன் ட்விட்டர் பக்கத்தில், "திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததை போல, நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இதன் மூலம், 2010 ஆம் ஆண்டு மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த போது ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் 'டாக்டர்' கனவை சிதைக்கும் நீட் தேர்வை கொண்டுவந்த தவறுக்கு பிராயசித்தம் தேடிக்கொள்ள தற்போது கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்திட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததை போல, நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே 'நீட்' தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். 1/2
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 20, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT