Published : 20 Jun 2021 03:15 AM
Last Updated : 20 Jun 2021 03:15 AM
சசிகலா நடராஜனுக்கு எதிராக முன்னாள் முதல்வர் பழனிசாமி அதிரடி காட்டிவரும் நிலையில் ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்’ என்ற அடிப்படையில் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும் உள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா நடராஜன், அதிமுகவில் மீண்டும் கோலோச்ச முடிவு செய்து காய்களை நகர்த்தி வருகிறார். இதற்கு, முன்னாள் முதல்வர் பழனிசாமி முட்டுக்கட்டையாக உள்ளார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் மற்றும் வீரமணி ஆகியோர் செயல்படுகின்றனர். மேலும் அவர்கள், சசிகலாவுக்கு எதிராக கண்டன குரலை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ‘ஆடியோ உரை யாடல்’ மூலம் சலசலப்பை ஏற்படுத்தி வரும் சசிகலா நடராஜ னின் ‘சதுரங்க விளையாட்டுக்கு’ ஈடுகொடுக்கும் வகையில்பழனிசாமி களம் இறங்கியுள்ளார்.
இதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி, சசிகலா நடராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, அதிமுக நிர்வாக வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சுமார் 55 மாவட்டங்கள் வாரியாக கூட்டம் நடத்தப்பட்டு சசிகலாநடராஜனுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப் படுகின்றன.
விழுப்புரம், மதுரை, சேலம், சிவகங்கை, தூத்துக்குடி, சென்னை போன்ற பல மாவட்டங்களில் நடத்தப்பட்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் திருவண்ணாமலை (வடக்கு மற்றும் தெற்கு) உட்பட சில மாவட்டங்களில் நடத்தப்பட்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. இதனால், சசிகலா நடராஜனின் சதுரங்க விளையாட்டின் சலசலப்பு அதிமுகவில் தொடர்கிறது.
இது குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டபோது, “அதிமுகவில் நிலவும் குழப்புத்துக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என தெரியவில்லை. யாரிடம் அதிகாரம் செல்லும் என்பதில் நிலை இல்லை. கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதால், மாவட்ட அதிமுக செயலாளர்கள் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு சசிகலா நடராஜனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனாலும், மாவட்டச் செயலாளர்கள், மூத்த தலைவர்கள் மற்றும் மாநில அளவில் முக்கிய பொறுப்பில் உள்ள பலரும், “பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்” என்ற மன ஓட்டத்தில் உள்ளனர். எதற்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இவர்களில் யார்? சிலிப்பர் செல் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT