Published : 19 Jun 2021 06:09 PM
Last Updated : 19 Jun 2021 06:09 PM
அளவுக்கு அதிகமான இன்டர்நெட் டேட்டா பயன்பாட்டால் கரோனா ஊரடங்கில் இளைஞர்கள் திசைமாறுவதாக பெற்றோருக்கு மனநல ஆலோசகர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இந்தியாவின் கரோனா ஊரடங்கில் இன்டர்நெட் பயன்பாடு 13 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அதிக பயன்பாட்டுக்கு காரணம் ஆன்லைன் வகுப்பு, சமூக வலைதளங்கள் மற்றும் படம் பார்ப்பது என்று கூறப்படுகிறது. ஆனால், இன்டர்நெட் தாராளா பயன்பயன்பாட்டால் கரோனா ஊரடங்கில் செல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் மாணவர்கள், இளைஞர்கள் பல்வேறு புதுப்புது மன அழுத்தப்பிரச்சனைகளில் சிக்கியுள்ளதாகவும், அதற்காக அவர்கள் அதிகளவில் மனநல ஆலோசனைக்கு வருவதாகவும் மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
மனநல ஆலோசகர் பி.ராஜா சவுந்தரபாண்டியன்
இதுகுறித்து மதுரை மனநல ஆலோசகர் பி.ராஜா சவுந்தரபாண்டியன் கூறியதாவது:
கைபேசியின் அபரிபிதமான அறிவியல் வளர்ச்சியால் இன்றைய இளைஞர் சமுதாயம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றது. இளைஞர்கள் எனக் கூறுவது ஆண் மற்றும் பெண் இருபாலர்களுக்கும் பொருந்தும்.
பல இளைஞர்கள் மோசமான பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அது எதனால் என்றால் “அளவுக்கு அதிகமாகக் கிடைக்கும் இன்டர்நெட் டேட்டா” முறையினால். இன்டர்நெட் டேட்டாவால் பிரச்சினையா? என்று வியப்பாக கேட்டால் நிச்சயமாக என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழில் ஒரு சொலவடை உண்டு “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” அதுபோல் தான் இந்த விஷயத்திலும் அளவுக்கு அதிகமாக டேட்டா கிடைப்பதால் பெரும்பாலானோர் அதைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
கரோனா ஊரடங்கில் ஆபாசப் படம் பார்ப்போரின் எண்ணிக்கையும், அதற்காக செலவுசெய்யும் டேட்டாவும் அதிகரித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் இப்பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அதற்கு உதாரணமாக ஓர் உண்மை சம்பவத்தைக் கூற விரும்புகிறேன்.
பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் என்னிடம் ஆலோசனை பெறவந்தனர். அவர்கள் இருவருமே விலையுர்ந்த ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள்.
உங்கள் பிரச்சினை என்னவென்று கேட்டதற்கு முதலில் தயக்கத்துடன் தொடங்கியவர்கள், பின்பு பிரச்சினையை சொல்ல ஆரம்பித்தார்கள். இருவருக்கும் மனதில் ஒரு குழப்பம் மற்றும் மன அழுத்தம் இருப்பதாகவும், அளவுக்கு அதிகமான ஆபாசப் படம் பார்த்து தாங்கள் தவறான பாதையில் செல்வதாகவும் கூறினார்கள்.
தவறான பழக்கத்தில் இருந்து தங்களால் மீள முடியவில்லை என்றனர்.
எங்களிடம் அளவுக்கு அதிகமாக இன்டர்நெட் டேட்டா இருப்பதால் என்ன செய்வதென்று தெரிவதில்லை. அதனால் தான் இந்த மாதிரியான படங்களைப் பார்க்கிறோம். முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் டேட்டாவை பயன்படுத்துவோம். ஏனேனில், டேட்டாவின் விலையும் அதிகம் அதன் வேகமும் குறைவு.
இப்போது குறைவான விலைக்கு அதிகமான டேட்டா கிடைப்பதால் எங்கள் மனது அதைத் தேடுகிறது. எங்களுக்கு அளவுக்கு அதிகமாக சுதந்திரம் இருப்பது, தனிமையில் அதிகமாக இருப்பதால், எங்கள் மனம் இதைச் சுற்றியே வருகிறது, என்றனர்.
அவர்கள் கூறிய இன்னொரு அதிர்ச்சித் தகவல், தங்கள் நண்பர்கள் பெரும்பாலானோர் இந்த மாதிரியான இணையதளங்களையே நாடுகிறார்கள். அதிகமாக பதிவிறக்கம் செய்கின்றனர் என்பதே.
கடந்த ஒரு வருடமாக தினமும் நாங்கள் குறைந்தது 4 முதல் 6 மணி நேரம் இந்த மாதிரியான படங்களை கைப்பேசியில் பார்க்கச் செலவிடுகிறோம் .
ஆபாசப் படம் பார்பதன் மூலம் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் தங்கள் ஆண்மை சக்தியை இழந்ததாக நினைத்து பல சித்த வைத்திய மருத்துவர்களை சந்தித்து விசேஷ மருந்துகள் என மருந்துகளை வாங்கி பல ஆயிரங்களை வீட்டிற்குத் தெரியாமல் செலவழிக்கிறோம் என்று கூறினர்.
இவர்களின் நண்பர்களின் வட்டாரத்தில் 5 நபருக்கு மேல் இந்த மாதிரியான சித்த மருந்துகளை சாப்பிட்டு வருகிறார்கள் என்றும், இவர்கள் அனைவருக்கும் வயது 22க்கும் குறைவுதான் என்றும் ஒரு அதிர்ச்சித் தகவல்களை அளித்தனர்.
இவர்களுக்கு உடலளவில் பாதிப்பு ஏற்பட்டதோ இல்லையோ, ஆனால் மனதளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்தது.
இவர்களுக்கு, இப்பொழுதே குடும்ப வாழ்க்கையைப் பற்றி பயம் தொற்றி கொண்டுவிட்டது. இந்த பிரச்சினை ஒரு குழப்பத்தையும் மற்றும் ஒரு விதமான மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி, அதனால் அவர்களால் எந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு இருந்தனர்.
மனநல ஆலோசகர் அவர்களுக்கு முறையான கவுன்சலிங் கொடுத்து மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து இப்போழுது இருவரும் தங்களுடைய பழைய வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.
அவர்கள் எல்லா கவுன்சலிங்களிலும் கூறிய ஒரே விஷயம் அளவுக்கதிகமாக கிடைத்த இந்த டேட்டாவால் எங்கள் வாழ்க்கையை மாற்றி விட்டது என்பது தான் .
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என்று கண்டு கொள்ளாமல் இருந்து விடக்கூடாது. அவர்கள் எந்தப் பாதையைம் நோக்கி பயணிக்கிறார்கள் என்று கண்கானிக்க வேண்டும். புதிதாக இன்டர்நெட் உபயோகிக்க பழகும் உங்கள் பிள்ளைகளுக்கு அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT