Published : 16 Dec 2015 09:13 AM
Last Updated : 16 Dec 2015 09:13 AM
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள ரயில்களின் புதிய கால அட்டவணைப் புத்தகத்தில் ஏராளமான பிழைகள் இடம் பெற்றுள்ளன. இதனால், பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் புதிய ரயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய ரயில்வே கால அட்டவணையில் ஏராளமான பிழைகள் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, 16 முதல் 20 கி.மீ. தூரத்துக்கு இரண்டாம் வகுப்புக்கான அடிப்படைக் கட்டணம் (பேஸ் ரேட்) ரூ.5 தான். ஆனால், அட்டவணை புத்தகத்தில் ரூ.10 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் 41 முதல் 45 கி.மீ. தூரத்துக்கு 2-ம் வகுப்புக்கான அடிப்படைக் கட்டணம் ரூ.10 தான். ஆனால் ரூ.15 என அச்சடிக்கப்பட்டுள்ளது. 66 முதல் 70 கி.மீ. தூரத்துக்கு 2-ம் வகுப்புக்கான அடிப்படைக் கட்டணம் ரூ.15 தான். ஆனால் ரூ.20 என புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கட்டண அட்டவணைக்குக் கீழே பாதுகாப்புக்கான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே பாதுகாப்புக்கான கூடுதல் கட்டணம் அடிப்படைக் கட்டணத்துடன் சேர்க்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், இந்த விவரம் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு (வண்டி எண்.43212) காலை 7.50 மணிக்கு ரயில் புறப்படும் என (பக்கம்-88) குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், இந்த ரயில் காலை 7.55 மணிக்குத்தான் புறப்படுகிறது. இதேபோல், திருவள்ளூர்-சென்னை சென்ட்ரல் (66022) ரயில் திருவள்ளூரில் இருந்து 7.58 மணிக்குப் புறப்படும் எனவும், அதற்கு அடுத்துள்ள புட்லூர் ரயில் நிலையத்தில் இருந்து 7.59 மணிக்குப் புறப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் இருந்து புட்லூர் செல்ல 4 நிமிடம் ஆகும். ஆனால், ஒரு நிமிடத்தில் இந்த ரயில் எப்படி புட்லூர் சென்றடையும் என தெரியவில்லை.
மேலும், வண்டி எண்.43222 என்ற விரைவு ரயில் திருவள்ளூரில் இருந்து காலை 9.30-க்கும், திருநின்றவூர் ரயில் நிலையத்தில் இருந்து 9.42-க்கும் புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், வண்டி எண்.43414 திருவள்ளூரில் இருந்து 9.28-க்கும், திருநின்றவூரில் இருந்து 9.43 மணிக்கும் புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு ரயில்களும் திருவள்ளூரில் இருந்து திருநின்றவூர் வரை ஒரே பாதையில் செல்கின்றன.
அட்டவணைப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி 9.28 மணிக்கு புறப்படும் ரயிலுக்கு பின்னால்தான் விரைவு ரயில் திருவள்ளூரில் இருந்து புறப்படுகிறது. ஆனால், திருநின்றவூர் ரயில் நிலையத்தை ஒரு நிமிடத்துக்கு முன்பாக சென்றடைவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், அரக்கோணம், சென்னை கடற்கரை ரயில் நிலையங்கள் சந்திப்பு (ஜங்ஷன்) ரயில் நிலையங்கள் ஆகும். ஆனால், இப்புத்தகத்தில் மேற்கண்ட ரயில் நிலையங்களின் பின்னால் ‘சந்திப்பு’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை.
இதுகுறித்து, மண்டல ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் பாஸ்கர் கூறும்போது, ஆண்டு தோறும் தெற்கு ரயில்வே வெளியிடும் ரயில் நேர அட்டவணைப் புத்தகத்தில் ஏராளமான பிழைகள் இடம் பெறுகின்றன. இதைப் படிக்கும் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். இப்பிழைகளுக்கு ரயில்வே அதிகாரிகள் பொறுப்பேற்பதில்லை. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை’’ என்றார்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, புதிய ரயில்வே கால அட்டவணையில் சில பிழைகள் இடம் பெற்றுள்ளதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT