Published : 19 Jun 2021 03:53 PM
Last Updated : 19 Jun 2021 03:53 PM
நீட் தேர்வின் பாதிப்பின் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்த வேண்டும். மாணவர்களும், அவர் தம் குடும்பங்களும் அனுபவிக்கிற துயரங்களைத் தவறாமல் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிடம், neetimpact2021@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு வருகின்ற ஜூன் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று நடிகர் சூர்யா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, சூர்யா இன்று (ஜூன் 19) வெளியிட்ட அறிக்கை:
"அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது.
எளிய குடும்பத்தினர் கல்வி பெற ஆதாரமாக இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் முறையே 40% மற்றும் 25% மாணவர்களில், 20% மாணவர்களே உயர்கல்விக்குச் செல்கின்றனர். தங்கள் எதிர்காலத்திற்காக 12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி படித்த பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது கல்வித் தளத்தில் அவர்களைப் பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி. நீட் நுழைவுத் தேர்வு வைக்கப்படுவதன் மூலம் மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்திற்கும் மறையாது. மாணவர் நலனுக்கும் மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை.
தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, நீட் தேர்வின் பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுடன் இணைந்து பயணிக்கிற அகரம் ஃபவுண்டேஷன், மாணவர்களுக்கான பாதிப்புகளை முறையாக அக்குழுவிடம் பதிவு செய்கிறது.
நமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய நீட் தேர்வின் பாதிப்பின் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்த வேண்டும். மாணவர்களும், அவர்தம் குடும்பங்களும் அனுபவிக்கிற துயரங்களைத் தவறாமல் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிடம், neetimpact2021@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு வருகின்ற ஜூன் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில், கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். அது ஒன்றே, நிரந்தரத் தீர்வு. கல்வி மாநில உரிமை என்கிற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT