Published : 19 Jun 2021 02:21 PM
Last Updated : 19 Jun 2021 02:21 PM

62 ஆண்டுகளுக்கு முன் வேங்காம்பட்டி பள்ளியை ஆய்வு செய்து கருணாநிதி கைப்பட எழுதிய குறிப்பு: ட்விட்டரில் பகிர்ந்த கரூர் ஆட்சியர்

கருணாநிதி கைப்பட எழுதிய குறிப்பை ட்விட்டரில் பகிர்ந்த ஆட்சியர்.

கரூர்

62 ஆண்டுகளுக்கு முன் வேங்காம்பட்டி பள்ளியை ஆய்வு செய்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி கைப்பட எழுதிய குறிப்பை கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கரூர் மாவட்டம், கருப்பத்தூர் ஊராட்சி, வேங்காம்பட்டியில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று (ஜூன் 18) ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர், ஆய்வுக்குறிப்பேட்டைப் பார்வையிட்டபோது, 1959-ம் ஆண்டு அப்போதைய குளித்தலை தொகுதி எம்எல்ஏவாக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இப்பள்ளியை ஆய்வு செய்து, அவர் கைப்பட எழுதிய ஆய்வுக்குறிப்பைக் கண்டு வியந்தார். மேலும், கருணாநிதி எழுதியுள்ள ஆய்வுக்குறிப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்: கோப்புப்படம்

அதில், "மு.கருணாநிதி எம்எல்ஏ இன்று வேங்காம்பட்டி மாவட்ட மன்ற ஆரம்பப் பாடசாலையைப் பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 107-ல் இன்று வருகை தந்திருந்தவர்கள் 71 பேர்.

இந்தப் பள்ளிக்கென கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் மரங்கள் உளுத்துப் போயிருக்கின்றன. அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றுவதாகப் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

மாணவர்களின் சுகாதாரம் இன்னும் அதிகமாக கவனிக்கப்படுதல் நன்று" என எழுதி, 'அன்புள்ள மு.கருணாநிதி' எனக் கையெழுத்திட்டு, 26.6.1959 என அதில் தேதியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஆய்வுக்குறிப்பை, ஆட்சியர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது, கரூர் மாவட்டத்தினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x