Published : 27 Jun 2014 10:41 AM
Last Updated : 27 Jun 2014 10:41 AM
தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் குடும்ப சண்டை யால் சான்றிதழ் பெற இயலாமல் தவிக்கிறார்கள் அங்கு படித்து முடித்த மாணவ-மாணவிகள். படிப்பு சான்றிதழ்கள் இல்லாததால் அவர்களால் எந்த வேலைக்குமே விண்ணப்பிக்க முடியவில்லை.
சான்றிதழ் வழங்கப்படவில்லை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ளது ஏ.ஆர்.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி. கடந்த 2 ஆண்டுகளில் அக்கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற சுமார் 350 மாணவ-மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ்கள் இன்னும் வழங்கப்படவில்லை.
அண்ணா பல்கலைக்கழகத்திட மிருந்துதான் சான்றிதழ்கள் இன்னும் வழங்கப்படவில்லையோ என்ற சந்தேகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத் திற்கு புகார் அனுப்பினர். ஆனால், அனைத்து மாணவர்களின் சான்றி தழ்களும் குறிப்பிட்ட காலத்தில் கல்லூரிக்கு அனுப்பப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
குடும்ப சண்டையால் சிக்கல்
இதைத் தொடர்ந்து, மாணவர் கள் கல்லூரி நிர்வாகத்தில் முறையிட்டபோதுதான் அவர் களுக்கு உண்மை நிலவரம் தெரியவந்தது. நிர்வாகத்தினரின் குடும்ப சண்டையில் ஒரு பிரிவினர் அலுவலகத்தில் வைக்கப் பட்டிருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் சான்றிதழ்களை எல்லாம் அள்ளிச்சென்ற அதிர்ச்சி தகவல் தங்களுக்கு தெரியவந்ததாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
சான்றிதழ் பிரச்சினை தொடர்பாக சில மாணவர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், இன்னும் சிலர் கோட்டையில் செயல்படும் முதல்வரின் தனிப்பிரிவிலும் புகார் செய்தனர். ஆனாலும், இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவர்கள் விரக்தியுடன் கூறினார்கள்.
அரசுக்கு கோரிக்கை
கல்லூரி அலுவலகத்தில் இருந்து சான்றிதழ் மாயமானது குறித்து நிர்வாகத்தின் சார்பில் போலீஸில் புகார் செய்தும் போலீஸார் அந்த புகாரை ஏற்று முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவுசெய்தது போல் தெரியவில்லை என்றும் மாணவர்கள் சந்தேகப்படுகிறார்கள். படிப்பு சான்றிதழ்கள் இல்லாததால் தங்களால் எந்த வேலைக்குமே விண்ணப்பிக்க முடியவில்லை என்று அவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களின் என்னென்ன சான்றிதழ்கள் மாயமாயின என்பதும் புதிராக உள்ளது. தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் இந்த பிரச்சினையை முக்கிய விஷயமாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்
சான்றிதழ் பிரச்சினை குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.வெங்கடேசன் கூறியதாவது:
சான்றிதழ் விவகாரம் குறித்து கல்லூரியின் தாளாளரிடம் விளக்கம் கேட்டோம். மேலும், இந்த பிரச்சினை குறித்து விசாரிப்பதற்காக பல்கலைக்கழக பதிவாளர் தலைமையில் ஏற்கெனவே ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது.
கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் சான்றிதழ்கள் மாயமானது குறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் நிலை குறித்த தகவல் இன்னும் வரவில்லை. இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு டூப்ளிகேட் சான்றிதழ் வழங்குமாறும், அசல் சான்றிதழ் கிடைக்கப்பெற்றவுடன் அவற்றை திரும்ப ஒப்படைத்துவிடுவதாகவும் கல்லூரியின் தாளாளர் யோசனை தெரிவித்தார். டூப்ளிகேட் சான்றிதழ்கள் வழங்கலாமா? என்பது குறித்தும் பரிசீலனை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT