Last Updated : 06 Dec, 2015 06:58 PM

 

Published : 06 Dec 2015 06:58 PM
Last Updated : 06 Dec 2015 06:58 PM

மழை பாதிப்பு: தூய்மைப் பணியின் அவசரமும் அவசியமும்

சென்னை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது தூய்மைப் பணி செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளம் தற்போது வடிந்து வருகிறது. சாலை, ரயில் போக்குவரத்துகள் செயல்பாட்டில் உள்ளன. நிவாரண உதவிகள், மருத்துவ முகாம்களுக்கு நேசக் கரங்கள் நீள்கின்றன.

புரட்டிப் போட்ட கனமழை பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வர வேண்டிய இந்த சூழலில், நமக்கு நாமே செய்ய வேண்டியவை என்ன? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது.

மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகளுக்கு நிகராக நாம் முக்கியத்துவம் தர வேண்டியது தூய்மைப் பணிக்குதான் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

மழை வெள்ளத்தால் சேதமடைந்த பொருட்கள் ஆங்காங்கே குப்பைகளாகியும், காற்றில் வீசியடிக்கப்பட்டும் தெருவெங்கும் காட்சியளிக்கின்றன. நிவாரண உதவிகளில் மிச்சமான பொருட்களும், கெட்டுப் போன உணவுப் பொட்டலங்களும் துர்நாற்றத்தை வரவழைக்கும். சாலையில் வெள்ள நீரும், கழிவு நீரும், மழை வெள்ள நீரும் எது என தெரியாமல் கலந்திருக்கும். அதை அப்படியே விட்டாலோ, துப்புரவுப் பணியாளர்கள் வந்து சுத்தப்படுத்தட்டும் என்று அலட்சியப்படுத்தினாலோ இழப்பு நமக்குதான்.

குப்பைகளைச் சுற்றி இருக்கும் கொசுக்களும், ஈக்களும் நோய்த்தொற்றை ஏற்படுத்தி நம்மை செயல்படமுடியாத நிலைக்கு ஆளாக்கிவிடும் என்பதால் தூய்மைப் பணி செய்ய வேண்டியது அவசர அவசியம்.

இதைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு தூய்மைப் பணியில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. சென்னையில் துப்புரவுப் பணிக்காக மட்டும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை தமிழக அரசு ஈடுபடுத்தி இருக்கிறது.

ஆனால், அவர்கள் மட்டுமே சுத்தப்படுத்த வேண்டும், அரசு செய்ய வேண்டும், அமைப்புகள் செய்ய வேண்டும் என்று காத்திருந்தால் நம் உடல் நிலை மோசமானதாகக் கூட மாற வாய்ப்பு உண்டு.

வந்த பின் நொந்து போவதை விட, வரப் போகும் நோயிலிருந்து நம்மை நாமே விடுவித்துக்கொள்ள களத்தில் இறங்கி செயல்படுவதுதான் ஆரோக்கியமானது.

தூய்மைப் பணியில் நாம் செய்ய வேண்டியவை:

மாணவர்கள்,இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என யார் வேண்டுமானாலும் தனித்தனியாக செயல்படாமல் இணைந்து செயல்பட தெருவுக்கு தெரு சில குழுக்களை உருவாக்கலாம். குழுவாக இணைந்து செயல்படுவதன் மூலம் தூய்மைப் பணியை விரைவாகவும், குறித்த நேரத்திலும் முடிக்க முடியும்.

வீட்டில் குடிநீர் தொட்டிகளோ அல்லது நீர் தொட்டிகளோ இருந்தால் அதை முதலில் சுத்தப்படுத்துங்கள். ஏற்கெனவே இருக்கும் அசுத்தமான நீரை தொட்டியிலிருந்து முழுவதுமாக வெளியேற்றிய பிறகு தேவைப்படும் நீரை நிரப்புங்கள்.

எந்த சூழலிலும் தெருவில், சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்ல வேண்டாம். எல்லா இடங்களிலும் குழந்தைகள் நடமாடிக்கொண்டிருப்பதால் அவர்களின் நலன் கருதி வழியில் குப்பை கொட்டுவதைத் தவிர்க்கவும்.

வீடுகளில் குப்பை சேகரிக்கும் சாதனம் இருந்தால் அதில் மட்டுமே குப்பைகளை சேகரித்து வைக்கலாம்.

குப்பை சேகரிக்கும் நகராட்சி, மாநகராட்சி வாகனம் வந்த பிறகு துப்புரவு தொழிலாளர்களே வீட்டுக்கு அருகில் வர வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்களாகவே குப்பை சாதனத்தை எடுத்துச் சென்று அதில் உள்ள குப்பைகளை வாகனத்தில் கொட்டுங்கள். இதில் எந்த ஈகோவும் பார்க்காமல் இருப்பது நல்லது.

தெருவில் மலை போல் குப்பைகள் குவிந்து கிடந்தாலும் எந்த வெறுப்போ, முகம் சுளித்தலோ, சுயநலமோ இல்லாமல் குழுவாக இணைந்து அப்புறப்படுத்தலாம்.

தேங்கிக் கிடக்கும் குப்பைகளையோ, கழிவுநீரையோ உங்களால் அகற்ற முடியாத பட்சத்தில் அதைக் குறித்த விவரங்களை கவுன்சிலர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நபர்களிடம் முறையாகத் தகவல் தெரிவிக்கலாம்.

வார்டு உறுப்பினர், கவுன்சிலர் ஆகியோரிடம் குளோரின் பவுடர் மற்றும் பிளீச்சிங் பவுடரைக் கேட்டுப் பெற்றுப் பயன்படுத்தலாம்.

மழைநீர் தேங்கிய பகுதிகளில் டெங்கு கொசு ஒழிக்கும் பணிக்காக புகை அடிப்பான்களைப் பயன்படுத்த மாநகராட்சியிடம் கோரிக்கை வைக்கலாம்.

டெங்கு வராமல் தடுக்க நிலவேம்பு குடிநீர் பயன்படுத்தலாம். அதைக் குறித்தும் தெரியாதவர்களுக்கு விளக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x