Published : 18 Jun 2021 07:39 PM
Last Updated : 18 Jun 2021 07:39 PM
கரோனா தொற்று பரவி வரும் நிலையில், சேலத்தில் பசி இல்லா சேலம் இளைஞர் குழுவினர் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு முடி திருத்தி, உணவு வழங்கி உதவிக்கரம் நீட்டி வருவதைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
கரோனா தொற்று இரண்டாம் அலையில், ஊரடங்கு வரும் 21-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. பிறர் உதவியை நம்பி வாழும் ஆதரவற்ற சாலையோரவாசிகள் உணவு கிடைக்காமல் பட்டினியில் அவதிப்பட்டு வந்தனர். இவர்களின் பசியைப் போக்கும் விதமாக, ‘பசி இல்லா சேலம்’ இளைஞர் குழு அமைப்பைச் சேர்ந்தவர்கள், சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு முடி திருத்தி, குளிக்க வைத்து, புத்தாடை வழங்கி, உணவு கொடுத்துப் பசியாற வைத்து, காப்பகங்களில் சேர்த்து வருகின்றனர்.
‘பசி இல்லா சேலம்’ இளைஞர் குழுவினர் இன்று சேலம் திருவள்ளுவர் சிலை அருகே சாலையோரத்தில் படுத்திருந்த இரண்டு ஆதரவற்ற முதியவர்களைக் குளிக்க வைத்து, புத்தாடை வழங்கி, உணவு வழங்கி, காப்பகத்தில் சேர்த்தனர். சேலம் ஜங்ஷன், ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி, டவுன் பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பல முதியவர்களும் பசியாறிட, தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.
மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி, மருந்து, மாத்திரைகள், உணவு வாங்கிக் கொடுப்பது, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் குடியிருப்பவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ‘பசி இல்லா சேலம்’ இளைஞர் குழுவைச் சேர்ந்த அருண்குமார் கூறும்போது, ''கரோனா தொற்றுக் காலத்தில் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, அனைத்துக் கடைகளும் இயங்காத நிலையில், சாலையோரங்களில் ஆதரவற்ற பலரும் பட்டினியில் வாடி வந்தனர். இவர்களின் பசியைப் போக்கிட ‘பசி இல்லா சேலம்’ குழுவினர் இணைந்து, சாலையோர முதியவர்களுக்குத் தினமும் உணவு வாங்கிக் கொடுத்தும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்தும் வருகிறோம்.
எங்கள் குழுவில் ஓட்டுநர், கார் மெக்கானிக், ஓட்டல் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர். கரோனா தொற்று முடிவுக்கு வரும் வரை, இப்பணியைத் தொடர்ந்து செய்திடுவோம்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT