Published : 18 Jun 2021 06:45 PM
Last Updated : 18 Jun 2021 06:45 PM

சென்னையில் 4 சுங்கச்சாவடிகள் நீக்கம்?- அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை

சென்னை பெருநகர எல்லைக்குள் உள்ள 4 சுங்கச்சாவடிகளைப் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

சென்னை ராஜீவ் காந்தி சாலையில் ரூ.108.13 கோடி மதிப்பில் இந்திரா நகர் சாலை சந்திப்பு, டைடல் பார்க் சந்திப்புகளில் நடைபெற்றுவரும் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுப் பணிகளையும், ‘யூ’வடிவ மேம்பாலங்கள், ஈசிஆர் சாலைப் பிரிவில் நடை மேம்பாலம், பக்கிங்காம் கால்வாய் குறுக்கே கட்டப்படும் கூடுதல் பாலம் ஆகியவற்றையும் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்திட அறிவுரை வழங்கினார்.

சென்னை பெருநகர எல்லைக்குள் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூரில் மேடவாக்கம் சாலை, கருணாநிதி சாலை சுங்கச்சாவடிகளை ஆய்வு செய்து அவற்றில் பொதுமக்கள் சந்திக்கும் குறைகளைக் களையத் தேவையான நடவடிக்கை எடுக்க தகவல் தொழில்நுட்ப விரைவுச் சாலை நிறுவனத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார். தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூர் பகுதியில் ரூ.234 கோடியில் நடைபெற்றுவரும் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்தி முடிக்க அறிவுறுத்தினார்.

சென்னை வெளிவட்டச் சாலையில் ரூ.1081 கோடியில் முடிக்கப்பட்ட சாலைப் பணிகளை ஆய்வு செய்து, தடைப்பட்டுள்ள சிறு சிறு பணிகளை விரைவில் முடிக்கவும், இச்சாலையில் கட்டமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளையும், அதில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் ஆய்வு செய்து பொதுமக்கள் எவ்வித சிரமத்திற்கும் ஆளாகாமல் சுங்கச்சாவடிகளைக் கடக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, "சென்னை மாநகரில் மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை முக்கியமான 5 சாலைகளின் சந்திப்பில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு 2010ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து அதற்கான நிதியையும் திமுக அரசு ஒதுக்கீடு செய்தது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தாமல் கைவிட்டது.

வளர்ந்து வரும் சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலையும், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கவும் மீண்டும் மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை முக்கிய 5 சாலைகளின் சந்திப்பில் சுமார் ரூபாய் 500 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்ட அலுவலர்களுடன் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர எல்லைக்குள் சுங்கச்சாவடி தேவையில்லை எனவும், அதை அகற்ற வேண்டும் எனவும், கடந்த காலங்களில் பொதுமக்கள் பெரிய போராட்டங்களை நடத்தினார்கள். சுங்கச்சாவடிகளை அகற்றினால் அரசுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட இழப்புகள் என்ன என்பதை இன்று நேரில் சென்று துறை அலுவலர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோருடன் கருத்துகளைக் கேட்டறிந்தேன். இதுகுறித்து, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்" எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்பொழுது நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் சாந்தி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனப் பொது மேலாளர் ஞானசேகர், மெட்ரோ தலைமைப் பொறியாளர் சுமதி, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x