Published : 18 Jun 2021 06:16 PM
Last Updated : 18 Jun 2021 06:16 PM

பயனாளி வீட்டிற்கே சென்று வீட்டுமனைப்பட்டா வழங்கிய உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி

வடமதுரை அருகே வேலாயுதம்பாளையத்தில் பயனாளி வசிக்கும் இடத்திற்கே சென்று இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிய உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி. 

திண்டுக்கல் 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வேலாயுதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற நபர் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்த நிலையில், அவர் வசிக்கும் இடத்திற்கே சென்று இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் அரசின் இலவச வீடு கட்டுவதற்கான ஆணையை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் கம்பிளியம்பட்டி கிராமத்தில் கரோனா இரண்டாம் கட்ட நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை வகித்தார். தமிழக உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பொதுமக்களுக்கு கரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்டா பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக அமைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எம்.பி., எம்.எல்.ஏ., க்கள், எங்கு எல்லாம் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்கின்ற நெல்லுக்கு உடனடியாக பணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்களை கடந்த காலத்தில் ஐந்து முதல் ஆறு நாட்கள் காக்கவைத்து பெற்றுள்ளனர்.

இனிமேல் அந்த நிலைமை ஏற்படக்கூடாது, என 24 மணி நேரத்தில் நெல் கொள்முதல் செய்து அதற்குரிய பணத்தை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் மழைக்காலத்தில் நெல் சேதாரம் ஆகாமல் இருக்க சைலோ முறையை கொண்டு வந்து நவீன அரிசி ஆலைகள் தொடங்கப்படும். மக்களுக்கு தரமான அரிசி கொடுக்க வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார். விவசாயி நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார், என்றார்.

பயனாளி வீட்டிற்கே சென்று வீட்டுமனைப்பட்டா வழங்கிய அமைச்சர்:

தொடர்ந்து செந்துறை உள்ளிட்ட கிராமங்களில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் அர.சக்கரபாணி, வடமதுரை அருகே வேலாயுதம்பாளையம் கிராமத்தில் வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்த செல்வராஜ் என்பவர் இருப்பிடத்திற்கே சென்று, அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார். வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன், கரூர் தொகுதி எம்.பி., ஜோதிமணி, திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x