Published : 18 Jun 2021 05:09 PM
Last Updated : 18 Jun 2021 05:09 PM
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. நீட் தேர்வு என்பது தற்போதுவரை நடைமுறையில் உள்ளது. அதனை ரத்து செய்ய திமுக முயன்று வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஓபிஎஸ் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்:
“நீட் தேர்வு பயிற்சி மையத்தை உருவாக்கியது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்தான். அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி என அறிவித்து அதற்கான பயிற்சி மையத்தையும் செயல்படுத்திக் கொண்டிருப்பது ஆட்சியாளர்கள்தான். இந்த நிலையில் ஏதோ திமுக அரசு அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி மையம் அமைத்துச் செயல்படுவது அவருக்குக் குழப்பம் ஏற்படுத்துவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
குழப்பத்துக்கு அவசியமே இல்லை, அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது, அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வுக்கான பயிற்சி அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி மையம் வந்தது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்தான் தேர்தல் அறிக்கையில் ஏற்கெனவே அவர் எடுத்துச் சொன்ன நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் விளக்களிக்கக் கோருவோம் என்று அறிவித்த அடிப்படையில் பிரதமருக்கு அது சம்பந்தமாக கடிதம் எழுதினார்.
அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் முறையான வகையில் சரியான வகையில் இந்த தேர்வு வராமல் இருப்பதற்கான முதல் படியாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளார். அந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு ஒரு மாத காலம் என அறிவிக்கப்பட்டு, இதுவரை தினமும் கூட்டம் நடத்தி வருகிறார். 4 கூட்டம் நடந்துள்ளது. முறையாக நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு பெறும் வகையில் நீதிபதி தலைமையிலான குழு, மேல் நடவடிக்கைகள் என்கிற அளவில் இந்த நடவடிக்கைகள் நடந்துகொண்டுள்ளன.
டெல்லியில் நேற்று பிரதமரைச் சந்தித்த முதல்வர், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரியுள்ளார். செய்தியாளர் சந்திப்பிலும் பிரதமர் அதைக் கனிவுடன் பரிசீலிப்பதாகத் தெரிவித்ததாகக் கூறினார். இதன் மூலம் நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் ஏதோ இப்போதுதான் வந்தது போலவும், கடந்த 10, 20 நாட்களில் நடந்த நிகழ்வுபோல அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2010 டிசம்பர் 27ஆம் தேதிதான் மத்திய அரசு இந்திய மருத்துவக் குழுமம் ஒரு நுழைவுத் தேர்வினை அமல்படுத்த அறிக்கை அளித்தது. 2011 ஜனவரி 3ஆம் தேதி நுழைவுத்தேர்வைப் பரிசீலிக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளாமல் உயர் நீதிமன்றத்தில் சென்று தடையாணை பெற்றது அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.
ஆனால், அதன் பிறகு 2017-ல் ஆட்சியிலிருந்த அதிமுக ஆட்சியில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வியில் நீட் நுழைவுத் தேர்வு விலக்கு கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இன்றைய முதல்வர், அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உடனிருந்து நிறைவேற்றினார். அது குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்பட்டது. அந்த இரு மசோதாக்கள் சம்பந்தமாக இந்த அரசின் சார்பில் எந்தவித அழுத்தமும் மத்திய அரசுக்குத் தராத நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்தார். மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காததால் திருப்பி அனுப்புவதாக அனுப்பிவிட்டனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது. குடியரசுத் தலைவர் மறுத்தார். அப்போதெல்லாம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் எதுவுமே பேசவில்லை, தமிழகத்து மாணவர்களுக்காகப் பரிந்து எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஆனால், இப்போது அதற்கான தீவிர நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் நீட் சம்பந்தமான அந்தப் பயிற்சியைப் பள்ளிகளில் அளிப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், மாணவர்களின் சேர்க்கை நீட் இல்லாத வகையில் அமைய வேண்டும் என்று கேட்டுள்ளார்.
நிச்சயம் அவருடைய எண்ணத்தைப் போல்தான் திமுகவும் நீட் தேர்வில் விலக்கு என்கிற அடிப்படையில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், உண்மைகளை மறைத்து நீட் வருவதற்குக் காரணமாக இருந்தது என்கிற விவரங்கள் அனைவருக்கும் தெரியும். தெரிந்திருந்தும் இதுபோன்ற குழப்ப அறிக்கையை ஏன் வெளியிட்டார் என்பது தெரியவில்லை.
இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது. அதற்காக மாணவர்கள் தயாராகும் சூழல் உள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது திமுக அரசின் நிலைப்பாடு. நீட் தேர்விலிருந்து விலக்களிப்பதற்கான செயலில் தொடர்ந்து செயல்படும். இதற்கு முன்னிருந்த அரசு, குடியரசுத் தலைவரிடம் எடுத்துச் சொல்லவில்லை. உள்துறை அமைச்சகத்திடம் வாதாடவில்லை. ஆனால், கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அப்போதே கமிஷன் அமைத்துத் தடை வாங்கியது.
அதேபோன்று இந்த அரசும், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பரிந்துரை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். அதுவரை நீட் தேர்வு இருக்கும். அதற்குப் பயிற்சி பெற வேண்டிய சூழலும் மாணவர்களுக்கு உண்டு. அந்தப் பயிற்சி மையத்தை அமைத்தது திமுக அரசு அல்ல, முன்பிருந்த அரசுதான். ஆகவே நீட் தேர்வுக்கான விதிவிலக்கு வரும்வரை நீட் தேர்வு இருக்கிறது என்பதுதான் உண்மை”.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT