Published : 18 Jun 2021 12:42 PM
Last Updated : 18 Jun 2021 12:42 PM
தமிழக சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 21 அன்று தொடங்குவதை அடுத்து, முதல் நாள் உரை நிகழ்த்தும் ஆளுநரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் அப்பாவு.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 அன்று ஒரே கட்டமாக நடந்தது. மே 2ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை மே 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் பொறுப்பேற்றது.
16-வது சட்டப்பேரவையின் முதல்வராக ஸ்டாலினும், அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். சட்டப்பேரவை சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டார். துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வானார். அவை முன்னவராக துரைமுருகன் நியமிக்கப்பட்டார்.
16-வது சட்டப்பேரவையின் முறைப்படியான பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ளதாக அரசு அறிவித்தது. இந்தக் கூட்டம் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. ஜூன் 21 அன்று காலை கலைவாணர் அரங்கில் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகைக் கூட்டரங்கில் நடக்கிறது. முதல் நாள் ஆளுநர் உரை நிகழ்த்துகிறார் என அறிவித்துள்ளார்.
ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை திட்டங்களைக் கொண்டதாக இருக்கும். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். அப்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து முதல்வர் தெரிவித்தார்.
கூட்டத்தொடர் தொடங்கும் முன், அலுவல் மரபுப்படி ஆளுநரைச் சந்தித்து சட்டப்பேரவை சபாநாயகர் அழைப்பு விடுப்பது வழக்கம். அதன்படி சபாநாயகர் அப்பாவு இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
“சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற ஜூன் 21ஆம் தேதி முதல் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. சட்டப்பேரவை தொடங்கும் முன் சபாநாயகர் ஆளுநரைச் சந்தித்து அழைப்பது வழக்கம். அதன்படி அவரைச் சந்தித்து அழைத்தேன். அவரும் மகிழ்வுடன் வருவதாக ஒப்புதல் அளித்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அது பரிசீலனையில் உள்ளது. கட்டாயம் அது நிறைவேற்றப்படும்.
நீட் தேர்வு குறித்த பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு ஆராய்ந்து பரிந்துரைகளை அளிக்கும். விரைவில் நீட் தேர்வு குறித்து நல்ல முடிவு வரும். நேற்று கூட முதல்வர், பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். ஆகவே, நீட் தேர்வு குறித்து நல்ல முடிவு வரும் என மக்கள் நம்புகிறார்கள்.
முதல் நாளே நாங்கள் சொல்லியிருக்கிறோம், முதல்வரும் சொல்லியிருக்கிறார். ஜனநாயக முறைப்படி விருப்பு வெறுப்பின்றி நேரம் ஒதுக்கப்படும். முதல்வர் அறிவித்த 14 வகை பொருட்களை அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களும் கொண்டுபோய் கொடுக்கச் சொல்லி முதல்வர் கூறியுள்ளார். அதே ஜனநாயகம் சட்டப்பேரவையிலும் நடக்கும்.
எத்தனை நாட்கள் சட்டப்பேரவை நடக்கும் என்பது குறித்து சட்டப்பேரவை ஆய்வுக் குழு ஜூன் 21 அன்று கூடி முடிவெடுத்து அறிவிக்கும்”.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT