Published : 18 Jun 2021 08:24 AM
Last Updated : 18 Jun 2021 08:24 AM
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களுக்கு ரூபாய் 3,000 அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 18) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா தொற்று பரவல் காரணமாக, பலகட்ட ஊடரங்கு அமலில் உள்ள இந்த வேளையில், பல்லாயிரக்கணக்கான நெசவுத் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெசவுக்கூடங்கள் இயங்காததாலும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் தேக்க நிலையில் உள்ளதாலும், நூல் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளதாலும், அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை அரசு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு தள்ளுபடி விலையில் அளித்தால், விற்பனை அதிகமாகும். பொருட்களின் தேக்க நிலை ஏற்படாது. இதனால், உற்பத்தியாளர்களும் நெசவு தொழிலாளர்களும் பெரிதும் பயன்பெறுவர்.
அதோடு, இத்தகைய இக்கட்டான சூழலில் அவர்களது வாழ்வாதாரம் ஒரளவுக்காவது சமன் செய்திட அவர்களுக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூபாய் 3,000 வழங்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT