Published : 18 Jun 2021 03:14 AM
Last Updated : 18 Jun 2021 03:14 AM

திருமணத்துக்கு ஒதுக்கி வைத்த ரூ.37. 50 லட்சத்தை கரோனா நலப் பணிகளுக்கு வழங்கிய மணமகன் குடும்பத்தினர்: திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்

திருப்பூரைச் சேர்ந்த அருள்செல்வத்தின் குடும்பத்தினர், மகனின் திருமணத்தின்போது கரோனா நலப்பணிக்கு நிதியுதவி வழங்கினர்.

திருப்பூர்

திருப்பூரில் திருமணத்தை எளிமையாக நடத்தி, திருமணத்துக்கு செலவு செய்ய ஒதுக்கி வைத்திருந்த ரூ.37.50 லட்சத்தை மணமகன் குடும்பத்தினர் கரோனா நலப் பணிகளுக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கு மண்டலத்தில் செல்வந்தர்கள், திருமணங்களை திருவிழா போல நடத்துவார்கள். தற்போது கரோனா ஊரடங்கால் கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்தக் கொண்டாட்டங்கள் பெரிதாக இல்லை. இந்நிலையில், திருப்பூர் கரட்டாங்காட்டைச் சேர்ந்த தொழிலதிபர் அருள்செல்வம் - மஞ்சுளா தம்பதி, தங்களது மகனின் திருமணத்துக்கு ஒதுக்கி வைத்த தொகையில், ரூ. 5 லட்சம் மட்டும் செலவு செய்துவிட்டு, எஞ்சிய தொகையான ரூ.37.50 லட்சத்தை கரோனா நலப் பணிகளுக்கு வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக தொழிலதிபர் அருள்செல்வம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: எனக்கு 2 மகன்கள். மூத்தவர் அருள் பரத். அவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 லட்சம் செலவு செய்து, திருப்பூரில் திருமணம் செய்தோம். இளையவர் அருள் பிரனேஷூக்கு, மணமகள் அனுவை கடந்த 14-ம் தேதி வட்டமலை அங்காளம்மன் கோயிலில், இரு குடும்பத்தார் மட்டும் பங்கேற்று எளிய முறையில் திருமணம் செய்து வைத்தோம். கரோனா தொற்றுக் காலம் என்பதால், திருமணத்தை பிரம்மாண்டமாக செய்யவில்லை. திருமணத்துக்கு என்று சேர்த்து வைத்த தொகையை, அப்படியே கரோனா நலப் பணிகளுக்கு பலரின் துயர் துடைக்க உதவும் என்ற அடிப்படையில் வழங்கிவிட்டோம்.

ஒட்டுமொத்த குடும்பத்தின் ஒருமித்த முடிவு இது. எங்களில் யாருக்கும் எந்த நெருடலும் இல்லை. மணமகள் வீட்டார் உட்பட நண்பர்கள், உறவினர்கள் என பல்வேறு தரப்பிலும் வரவேற்கவே செய்தனர். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இந்த திருமணம் அமைந்துள்ளது என பலரும் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். இது எங்களுக்கு ஆத்ம திருப்தியை தந்துள்ளது.

ஏற்கெனவே மூத்த மகன் திருமணத்தில் மொய்ப்பணமாக வசூலான ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்துடன், நாங்கள் கூடுதலாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் போட்டு, திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் மூலம், போலியோ ஒழிப்பு பணிகளுக்கு நிதி வழங்கினோம். எனது தந்தை பழனிசாமி, மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்பார். அதனை தொடர்ந்து செய்து வருகிறோம் என்றார் மிகுந்த நெகிழ்ச்சியோடு.

திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள ரோட்டரி கரோனா கேர் மையத்துக்கு ரூ.5 லட்சம், பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா மையத்துக்கு ரூ.11 லட்சம், புஞ்சை புளியம்பட்டியில் கட்டப்பட்டு வரும் முதியோர் இல்லத்துக்கு ரூ.2 லட்சம், பாரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி வளர்ச்சிக்கு ரூ.5 லட்சம், திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கத்தின் வாயிலாக பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்துக்கு ஐ.சி.யூ யூனிட் அமைக்க ரூ.7.66 லட்சம், கரோனா பாதித்து மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் தத்தளித்த 8 குடும்பங்களுக்கு ரூ.7 லட்சம் என, ரூ.37 லட்சத்து 66 ஆயிரத்தை வழங்கி உள்ளனர். இது தவிர, கரோனா நலப் பணிகளுக்காக சிலர் உதவி கேட்க கூடுதலாக ரூ.14 லட்சத்தை வரும் வாரத்தில் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

பொதுவாக திருமணங்கள் முடிந்தால் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துவார்கள். ஆனால், இவர்களின் செயலை அறியும் இதயங்களும் புதுமணத் தம்பதியரையும், குடும்பத்தையும் மனதார வாழ்த்துகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x