Published : 17 Jun 2021 05:51 PM
Last Updated : 17 Jun 2021 05:51 PM
டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். 25 நிமிடம் நடந்த இச்சந்திப்பில் தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசி மனு ஒன்றையும் அளித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதன்முறையாக மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்ததால் இன்று சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.
மே 2ஆம் தேதி பதவி ஏற்றாலும், கரோனா இரண்டாவது அலை பரவல் அதிகம் இருந்த காரணத்தால் அவர் உடனடியாக டெல்லி செல்லவில்லை. ஆனாலும், கரோனா தொற்று குறைந்தவுடன் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பேன், தமிழக கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.
பிரதமருடன் இன்று மாலை சந்திக்க அனுமதி கிடைத்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், உதவியாளர் தினேஷ், தனிச் செயலர்கள் உதயச்சந்திரன், உமாநாத், செல்வராஜ் உள்ளிட்டோர் சென்றனர்.
டெல்லியில் முதல்வரை டி.ஆர்.பாலு, கனிமொழி, டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். டெல்லி தமிழக இல்லத்தில் அவரைத் தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கார்டு ஆஃப் ஹானர் எனப்படும் டெல்லி பட்டாலியன் போலீஸார் அரசு மரியாதை அளித்தனர்.
பின்னர் மாலை 5 மணி அளவில் பிரதமர் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியைச் சந்தித்தார். அவருடன், அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் உடன் சென்றனர். பிரதமரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் 25 நிமிடம் பேசினார். அப்போது தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. தமிழகம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை மனுவையும் பிரதமர் மோடியிடம் அளித்தார்.
பின்னர் பிரதமரிடம் விடைபெற்று தமிழ்நாடு இல்லம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT