Published : 17 Jun 2021 05:13 PM
Last Updated : 17 Jun 2021 05:13 PM

அதிமுகவை அபகரிக்க முயற்சி: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம்

எடப்பாடி பழனிசாமி - சசிகலா: கோப்புப்படம்

சேலம்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற சேலம் புறநகர் மாவட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக, அதிமுக தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சேலத்தை அடுத்த ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 17) நடைபெற்றது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார்.

கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை, அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், எம்எல்ஏக்கள் மணி, நல்லதம்பி, சித்ரா, ராஜமுத்து, ஜெய்சங்கரன், சுந்தர்ராஜன், பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

" * அதிமுகவை ஆரம்பித்த எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர், அதிமுகவின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் உயர்வுக்காகவும் ஜெயலலிதா 34 ஆண்டுகள் அரும்பாடுபட்டார். அவரது மறைவுக்குப் பின்னர் அதிமுகவை ஒற்றுமையாக வழிநடத்தி, சிறப்பாக ஆட்சி நடத்திச் செல்கின்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

* பல கட்சிக் கூட்டணி, பல ஆயிரம் கோடி செலவு, பகட்டான வாக்குறுதி உள்ளிட்டவற்றுடன் திமுக மற்றும் எதிர் அணியினர் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகக்குறைந்த வாக்கு சதவீதத்தில்தான் வெற்றி பெற்றிருக்கின்றனர். பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகவின் 66 எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் உரக்கக் குரல் எழுப்பி, மக்கள் பணியாற்றத் துடித்துக் கொண்டுள்ளனர்.

* சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தான் அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாக ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக பகிரங்கமாக செய்தி வெளியிட்ட சசிகலா, தேர்தல் முடிவுக்குப் பின்னர் அரசியலில் முக்கியத்துவத்தை தேடிக்கொள்ள, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக, ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதாக, விநோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

அவர், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லை. தொலைபேசியில் சசிகலா பேசும்போது, சாதிய உணர்வுகளைத் தூண்டும் விதமாகப் பேசுவது, ஒருதாய் வயிற்றுப் பிள்ளையாக வாழும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதை அதிமுக சேலம் புறநகர் மாவட்டம் சார்பாகக் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜெயலலிதா மற்றும் அதிமுக செயல் வீரர்களின் உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும், தங்களை வளப்படுத்திக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர், மீண்டும் அதிமுகவை அபகரித்துவிட வஞ்சக வலையை விரித்துக் கொண்டுள்ளனர்.

ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக, அதிமுக தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது. சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை, அதிமுகவில் இருந்து உடனடியாக நீக்கியதையும், அதிமுக தலைமை அலுவலகக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வரவேற்கிறோம்.

* தேர்தல் வெற்றிக்காகப் பாடுபட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினர் ஆகியோருக்கு நன்றி. அதிமுக கூட்டணிக்கு 75 எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும் நன்றி.

சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில், 10 தொகுதிகளில் அதிமுகவை வெற்றிபெறச் செய்த அதிமுக, கூட்டணிக் கட்சியினர், வாக்காளர்கள், சேலம் வடக்கு தொகுதியில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி.

இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை, அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகவும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தையும் மற்றும் பிற நிர்வாகிகளையும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு நன்றி.

* கரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழில், உண்மையான காரணத்தைத் தமிழக அரசு குறிப்பிட வேண்டும். மேலும், கரோனா தொற்று, கருப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனுக்குடன் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கரோனா தொற்றினால் இறந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

* கரோனா காலத்தில் கட்டுமானப் பொருட்கள் தேவை குறைந்துள்ள நிலையில், அவற்றின் விலை உயர்ந்திருப்பது, மக்களிடம் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, விலை உயர்வைக் குறைப்பதற்கு அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்" என 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x