Published : 17 Jun 2021 04:37 PM
Last Updated : 17 Jun 2021 04:37 PM
முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரி மாறும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரியை நூறு சதவீத தடுப்பூசி மாநிலமாக மாற்ற ஜூன் 16 முதல் 19 வரை தடுப்பூசி திருவிழா நடந்து வருகிறது. மாநிலம் முழுக்க 100க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவண்டார் கோயில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை பேசுகையில், ''புதுச்சேரியில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. தடுப்பூசி திருவிழாவில் முதல் நாளில் மட்டும் 13 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்நிலை நீடித்தால் நானும் முதல்வரும் எதிர்பார்ப்பதுபோல் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரி மாறும். இந்தியாவில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலம் புதுச்சேரி என்ற பெருமையை ஏற்படுத்த வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே கரோனா மூன்றாவது அலையை நாம் எதிர்கொள்ள முடியும். பிரதமர் கூறியதுபோல் கரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு கிராமத்தையும் முழு தடுப்பூசி போட்ட கிராமமாக மாற்ற வேண்டும்" என்றார்.
திருபுவனையில் புதுப்பிக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத்தை ஆளுநர் திறந்துவைத்துப் பார்வையிட்டார். இந்நிலையத்துக்குத் தரப்பட்ட மருத்துவ சாதனங்களை சுகாதாரத் துறையிடம் ஒப்படைத்தார்.
புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் அருண் கூறுகையில், "புதுச்சேரியில் இதுவரை 3.5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தீவிரப்படுத்தவே தடுப்பூசி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT