Published : 17 Jun 2021 04:07 PM
Last Updated : 17 Jun 2021 04:07 PM

நீர்நிலைகள் புனரமைப்பு, மழைநீர் வடிகால் திட்டப் பணிகளில் தொய்வு; 23 ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

ஆய்வு மேற்கொண்ட ககன்தீப் சிங் பேடி.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் திட்டப் பணிகளைக் குறித்த காலத்தில் தொடங்காத 23 ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் காரணம் கேட்டுக் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூன் 17) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 2,071 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் மற்றும் கோவளம் வடிநிலப் பகுதிகளில் பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட அதிநவீன இயந்திரங்களான நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரம், ரோபோடிக் மண் தோண்டும் இயந்திரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் நீர்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

மழைநீர் வடிகால் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று (ஜூன் 16) நடைபெற்றது. தொடர்ந்து, ஆணையாளர், முடிவுற்ற மழைநீர் வடிகால் திட்டப் பணிகளை இன்று நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-127, காளியம்மன் கோயில் சாலை, சின்மயா நகர் சந்திப்பில் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் தூர்வாரப்படும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தக் கால்வாயானது பொதுப்பணித் துறையினால் பராமரிக்கப்படும் 16 கால்வாய்களில் ஒரு கால்வாய் ஆகும்.

இந்தக் கால்வாயில் தூர்வாரிப் பராமரிக்கப்படவில்லையெனில் மழைக்காலங்களில் நெற்குன்றம், சின்மயா நகர், கோயம்பேடு மற்றும் சாலிகிராமம் பகுதிகளில் அதிக அளவு மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.

எனவே, மாநகராட்சிப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோபோடிக் வாகனங்களைக் கொண்டு இந்தக் கால்வாயில் உள்ள வண்டல்கள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்றிப் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தொடர்ந்து ஆணையாளர், காளியம்மன் கோயில் சாலையில் இருபுறங்களிலும் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தப் பகுதியில் கடந்த காலங்களில் மழைநீர் தேக்கம் அதிக அளவு இருந்ததால் 5 இடங்கள் கண்டறியப்பட்டு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு விருகம்பாக்கம் கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க 1,600 மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் பேருந்து சாலைகள் துறையின் மூலம் சென்னை குடிநீர் வாரியம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துடன் இருந்து குறிப்பிட்ட அளவு இடத்தைப் பெற்று 16 மீட்டரிலிருந்து 27 மீ. அகலம் கொண்ட சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட காளியம்மன் கோயில் சாலையை ஆணையர் பார்வையிட்டார்.

மேலும், கோயம்பேடு வணிக வளாகத்திற்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மியாவாக்கி அடர்வனக் காடுகளையும் பார்வையிட்ட ஆணையர் கோயம்பேடு மேம்பாலப் பகுதிகளுக்குக் கீழுள்ள காலியிடங்களிலும், மரம், செடிகளை அமைத்து பசுமையாகப் பராமரிக்க திட்டம் வகுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஆணையர், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-137, வன்னியர் தெரு மற்றும் வார்டு-131, அண்ணா பிரதான சாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அச்சமயம் மழைநீர் வடிகால் கான்கிரீட் அளவீடுகள் சரியாக உள்ளதா என அளவிட்டுச் சரிபார்த்தார்.

இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் மூலம் வளசரவாக்கம், நெற்குன்றம் மற்றும் ஆற்காடு சாலை ஆகிய பகுதிகளிலிருந்து மழைநீரானது எம்ஜிஆர் கால்வாயில் சென்று சேரும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மழைக்காலங்களில் ராஜமன்னார் சாலையில் ஏற்பட்ட மழைநீர் தேக்கம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும், ஆணையர் ஆலந்தூர் மண்டலம், வார்டு-157, ரிவர்வியூ காலனியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மழைநீர் வடிகால் மற்றும் சாலைகள் அமைக்கும் திட்டம் குறித்து அலுவலர்களுடன் கள ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மணப்பாக்கம் பிரதான சாலையில் உலக வங்கி நிதியுதவியுடன் சாலைக்குக் கீழ் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளையும், மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிதாகக் கட்டப்பட்ட நந்தம்பாக்கம் கால்வாயைப் பார்வையிட்டு அதில் ரோபோடிக் இயந்திரங்கள் கொண்டு தூர்வாரப்படும் பணிகளையும் அங்கு நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் தூண் (Smart Pole) மற்றும் வெள்ள அபாயம் குறித்து ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு சமிக்ஞைகள் தெரிவிக்கும் சென்சார் கருவிகளையும் பார்வையிட்டு அதுகுறித்துக் கேட்டறிந்தார்.

இந்த வெள்ள சென்சார் கருவியானது கால்வாயில் 2.50 மீ. அளவுக்கு மேல் தண்ணீர் செல்லும்போது உடனடியாகக் கட்டுப்பாட்டு மையத்திற்கு சமிக்ஞை தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தக் கால்வாய்களில் குப்பை மற்றும் இதர கழிவுகளைத் தடுப்பதற்காக 3 மீ. உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளைப் பார்வையிட்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 30 கால்வாய்களில் நவீன ஆம்பிபியன் மற்றும் ரோபோடிக் இயந்திரங்கள் கொண்டு இதுநாள்வரை 43,200 மெட்ரிக் டன் அளவிலான வண்டல்கள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன.

அலுவலர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் குறித்த கள ஆய்விற்குப் பின்னர் நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளைத் தொடங்காமல் ஒப்பந்தப் பணிகளில் தொய்வு ஏற்படுத்திய ஒப்பந்ததாரர்கள் மற்றும் வடசென்னை பகுதிகளுக்கு உட்பட்ட கொசஸ்தலை வடிநிலப்பகுதிகளின் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டப் பணிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளைத் தொடங்காமல் ஒப்பந்தப் பணிகளில் தொய்வு ஏற்படுத்திய 23 ஒப்பந்ததாரர்களுக்குப் பணிக்கான தாமதம் குறித்துக் காரணம் கேட்டு மாநகராட்சியின் சார்பில் குறிப்பாணை (Show cause notice) வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பணிகளில் தொய்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x