Published : 17 Jun 2021 03:03 PM
Last Updated : 17 Jun 2021 03:03 PM
அதிமுகவை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று யார், யாருடனோ தொலைபேசியில் பேசி நாடகமாடி வரும் சசிகலாவின் கனவு ஒருபோதும் நனவாகாது என்று, விழுப்புரத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 17) விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கண்ணன் தலைமையேற்றார்.
இக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசியதாவது:
"அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவுடன் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தனிப்பட்ட குடும்பத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கம். 'ஆடிய கையும் பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பதைப் போல மீண்டும் அதிமுகவைக் கைப்பற்றி கொள்ளை அடிக்கலாம் என, சசிகலா திட்டம் போடுகிறார்.
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவி கூட இல்லாத சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அதிமுகவில் இனி எப்போதுமே இடமில்லை. இந்த இயக்கத்தை எப்படியாவது அபகரித்துக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சசிகலா யார், யாருக்கோ தொலைபேசியில் பேசி நாடகம் ஆடி வருகிறார்.
அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று தெள்ளத்தெளிவாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எப்படியாவது அதிமுகவைக் கைப்பற்றி விடவேண்டும் என்று சசிகலா கனவு காண்கிறார். அவரது கனவு ஒருபோதும் நனவாகாது.
சசிகலா குடும்பம் அடித்த கொள்ளையால்தான் வீண் பழியை ஏற்றுக்கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குச் சென்றார். ஜெயலலிதாவின் சாபத்தால்தான் சசிகலா ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றார்.அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியிலேயே இல்லாத சசிகலாவுக்கு அதிமுகவைப் பற்றிப் பேசுவதற்கு எந்தத் தகுதியும், தார்மீக உரிமையும் கிடையாது.
இன்றைக்கு நமக்கு எதிரி திமுக மட்டுமல்ல, இந்த இயக்கத்திற்கு துரோகம் விளைவிக்க நினைக்கும் துரோகிகளை இனம் கண்டுகொண்டு இயக்கத்தை ஜாக்கிரதையாக நடத்த வேண்டும். சசிகலா குடும்பத்தை நாம் எந்தக் காலத்திலும் நெருங்கவிடக் கூடாது.
சசிகலாவுடன் பேசும் நிர்வாகிகளை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என, தலைமைக் கழகத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விழுப்புரம் மாவட்ட அதிமுக ஏற்றுக்கொண்டு வரவேற்கிறது".
இவ்வாறு சி.வி.சண்முகம் பேசினார்.
இக்கூட்டத்தில், எம்எல்ஏக்கள் சக்கரபாணி, அர்ஜுனன், முன்னாள் எம்எல்ஏ முத்தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலாளர்கள் ராமதாஸ், விநாயகமூர்த்தி, பன்னீர், கோவிந்தசாமி, கண்ணன், ராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் வண்டிமேடு ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT