Published : 17 Jun 2021 02:30 PM
Last Updated : 17 Jun 2021 02:30 PM
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே கொத்தமங்கலத்தில் பொது இடத்தில் மரக்கன்றுகளை நட்டு இளைஞர் ஒருவர் காவல் காத்து வருகிறார்.
கொத்தமங்கலம் கூலாட்சிகொல்லையைச் சேர்ந்தவர் ஆர்.ரமேஷ். விவசாயியான இவர், தனது ஓய்வு நேரங்களில் கொத்தமங்கலத்தில் சுமார் 150 ஏக்கரில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான அய்யனார் குளத்தின் அருகே மரக்கன்றுகளை நட்டு, தண்ணீர் ஊற்றுவதோடு, தினமும் காவல் காத்து வருகிறார்.
இவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், நேரில் சென்று அண்மையில் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து 'இந்து தமிழ்' நாளிதழிடம் ரமேஷ் கூறும்போது, ''அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சுமார் 150 ஏக்கரில் உள்ள அய்யனார் குளத்தின் மையத்தில் சுமார் 1 ஏக்கரில் ஒரு சிறிய குளம் உள்ளது. இந்தக் குளத்தில் மட்டும்தான் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் தண்ணீர் இருக்கும்.
இந்நிலையில், பொதுமக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக இக்குளத்தைச் சுற்றிலும் வேம்பு, மருதம், ஆல், அரசு, அத்தி, இத்தி, ருத்ராட்சம், திருவோடு, வன்னி, வின்னி, வேங்கை, இலுப்பை, மா, கிராம்பு ஆகிய வகைகளில் சுமார் 1,000 மரக்கன்றுகளை நட்டேன்.
இவற்றில், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளால் 50 சதவீதக் கன்றுகள் சேதம் அடைந்துவிட்டன. தண்ணீர் இல்லாத நேரங்களில், எஞ்சிய கன்றுகளுக்குத் தேவைக்கு ஏற்ப தலா ஒரு குடம் வீதம் தண்ணீர் ஊற்றிப் பாதுகாத்து வருகிறேன். சேதம் ஏற்படாதிருக்க அன்றாடப் பணிகளை முடித்த கையோடு மரக்கன்றுகளின் காவலாளியாகவும் இருந்து வருகிறேன்.
குளத்தில் தண்ணீர் இல்லாத காலங்களில் விலைகொடுத்துத் தண்ணீர் வாங்கி ஊற்றியும் பராமரித்து வருகிறேன். இத்தகைய பணிகளுக்கு கிராம இளைஞர்களும் அவ்வப்போது ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
தகவலறிந்து, எனது சேவையை அங்கீகரிக்கும் விதமாக நேரில் வந்து பாராட்டிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனிடம், மரக்கன்றுகளைப் பராமரிப்பதற்காக ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். இக்கோரிக்கை நிறைவேறினால், இக்குளத்தை அடர் வனமாக மாற்ற வேண்டும் என்ற எனது இலக்கை குறிப்பிட்ட ஆண்டுகளிலேயே நிறைவேற்றுவேன்'' என்று ரமேஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT