Published : 17 Jun 2021 12:50 PM
Last Updated : 17 Jun 2021 12:50 PM
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தார். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 35 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் தொற்று குறைந்ததால் வழங்கப்பட்ட தளர்வில் அரசு திறந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் இன்று பாமக சார்பில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து பாமக இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாத நிலையில், தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் பாமகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகளின் வீடுகள் முன் கரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்து 5 பேருக்கு மிகாமல் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
அவரது ஆணைப்படி, தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், நாட்டு மக்களின் நலன் கருதி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் சென்னையில் உள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இல்லத்தின் முன் மதுவிலக்குக்கு ஆதரவாகவும், மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராகவும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பாமகவினர் அறப் போராட்டம் நடத்தினார்கள்”.
இவ்வாறு பாமக தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT