Published : 17 Jun 2021 11:15 AM
Last Updated : 17 Jun 2021 11:15 AM

ராகுல் காந்தி பிறந்தநாள்; கரோனா நிவாரண நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

ராகுல் காந்தி: கோப்புப்படம்

சென்னை

ராகுல் காந்தியின் பிறந்தநாளை கரோனா நிவாரண நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூன் 17) வெளியிட்ட அறிக்கை:

"காங்கிரஸ் கட்சியின் ஒப்பற்ற தலைவர் ராகுல் காந்தியின் 50-வது பிறந்தநாள் விழா, வருகிற ஜூன் 19 ஆம் தேதி மிக எளிமையாக, ஆடம்பரமில்லாமல் ஆக்கப்பூர்வமான முறையில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, கரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உபகரணங்கள், முகக்கவசங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிற தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று விரும்பினாலும், கரோனா தொற்றுக் காரணமாக விழாவாகக் கொண்டாட வேண்டாமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி, பிறந்தநாளன்று கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல், பேனர்கள் மற்றும் சுவரொட்டி விளம்பரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சியினர் அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம்.

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளன்று கரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குகிற வகையில் மருத்துவ உபகரணங்கள், முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் ஆகியவற்றை வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தகைய அரிய சேவைகளின் மூலம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் எளிமையான முறையில் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை கரோனா நிவாரண நாளாகக் கடைப்பிடிப்பதன் மூலம் ஏழை, எளிய மக்களின் அன்பையும், ஆதரவையும் பெறுகிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உற்ற துணையாகத் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிற வகையில், அவரது பிறந்தநாளில் நிகழ்ச்சிகள் அமைத்திட வேண்டும்.

இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிற தலைவராக விளங்குகிற ராகுல் காந்தியின் பிறந்தநாளில், கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிற வகையில் செயல்படுவதே, அவருக்கு நாம் சொல்லும் பிறந்தநாள் வாழ்த்தாக இருக்க முடியும்.

எனவே, தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளின் மூலம் கரோனா நிவாரணப் பணிகளை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென தமிழக காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

ராகுல் காந்தி பிறந்தநாளில் இத்தகைய பணிகளை மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டிகளின் தலைவர்கள் முன்னின்று சிறப்பாகச் செய்து மக்களின் அன்பையும், ஆதரவையும் பெறவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x