Published : 19 Dec 2015 08:44 AM
Last Updated : 19 Dec 2015 08:44 AM
திருமணங்களை பதிவு செய்வது தொடர்பாக, அனைத்து சார்-பதிவாளர் களுக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய தனி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என பதிவுத் துறை தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூரைச் சேர்ந்த நடராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:
ஆரோக்கியசாமி என்பவரது மகள் மரியபிரிட்டோவை காதலித்தேன். இருவரும் திருச்சி கண்டோன்மென்ட் சக்தி விநாயகர் கோயிலில் கடந்த அக். 29-ல் திருமணம் செய்தோம். திருச்சி சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தோம்.
தற்போது மரியபிரிட்டோ கர்ப்பமாக உள்ளார். இதை சொல்வதற்காக பெற்றோர் வீட்டுக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவருக்கு கருக்கலைப்பு செய்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றனர். மரியபிரிட்டோவை ஆஜர்படுத்தி தன்னுடன் அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மரியபிரிட்டோ நேரில் ஆஜராகி, தனக்கும், நடராஜனுக்கும் சக்தி விநாயகர் கோயிலில் திருமணம் நடைபெறவில்லை. சார்-பதிவாளர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம் என்றார்.
இதையடுத்து முறைப்படி திருமணம் நடைபெறாமல், பதிவு சான்றிதழ் வழங்கியது தொடர்பாக திருச்சி சார்-பதிவாளர் தெய்வசிகாமணி நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.சிவகுமார், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சார்-பதிவாளர் தெய்வசிகாமணி நேரில் ஆஜராகி நடராஜன்- மரியபிரிட்டோ திருமணம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார். அவற்றை ஆய்வு செய்த நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு சார்-பதிவாளர் தெய்வசிகாமணி சரியாக பதிலளிக்கவில்லை.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இருவேறு மதத்தினர் திருமணம் செய்தால் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். அதை சார்-பதிவாளர் செய்யவில்லை. திருமண ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட தகவல்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால், திருமணத்தை பதிவு செய்ய மறுப்பு தெரிவிக்கவும், அந்த தகவல்களைப் போலீஸார் மூலம் சரிபார்க்கவும் சார்-பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. திருமணப் பதிவு விண்ணப்பத்தில் அளிக்கப்படும் தகவல்களை சரிபார்த்து, அதில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.
சென்னை ராயபுரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களை சரிபார்க்காமல், திருமணங்கள் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தன. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு கடுமையான உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகு திருச்சி சார்-பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடான திருமணப் பதிவு நடைபெற்றுள்ளது.
தகவல்களை சரிபார்க்காமல் திருமணத்தைப் பதிவு செய்த திருச்சி சார்-பதிவாளரின் நடவடிக்கையை ஏற்க முடியாது. அவரை திருமணப் பதிவு அலுவலராக தொடர அனுமதிக்க முடியாது. வேறு பணிக்கு மாற்ற வேண்டும். மேலும் திருமணங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக, அனைத்து சார்-பதிவாளர்களுக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கையை பதிவுத்துறை தலைவர் அனுப்ப வேண்டும்.
இந்த வழக்கைப் பொருத்தவரை மனுதாரருக்கும், மரியபிரிட்டோவுக்கும் நடைபெற்ற திருமணம் செல்லாது. இருப்பினும் மரியபிரிட்டோ மேஜர். அவர் தந்தையுடன் செல்ல விரும்பாத நிலையில், அவரை கட்டாயப்படுத்த முடியாது. அவர் விருப்பப்படி செல்ல அனுமதி வழங்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT