Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM
தனிநபர் மற்றும் தொழில் துறையினர் மேம்பாட்டுக்காக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சிறப்பு கடன் திட்டங்கள், கடன் சீரமைப்பு திட்டங்கள் வங்கிகள், அனைத்து நுண் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா இரண்டாம் அலை ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர் மற்றும்தொழில் துறையினர் மேம்பாட்டுக்காக, சிறப்பு கடன் திட்டங்கள் மற்றும்கடன் சீரமைப்பு திட்டங்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித் துள்ளது. இவை, அனைத்து வணிக வங்கிகள் (பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்), கூட்டுறவு வங்கிகள், தமிழ்நாடு கிராம வங்கிகள் மற்றும் அனைத்து நுண் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
ரூ.50 கோடி வரையில் கடன் பெற்ற தனிநபர் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மார்ச் 31-ம்தேதிவரை முறையாக வட்டி செலுத்தியிருந்தால் பயனடையலாம். தொழில் துறையினர் மேம்பாட்டுக்காக அவசர காலக் கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் 2020-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி நிலவரப்படி, வங்கியில் உள்ள கடன்நிலுவையில் 20 சதவீதம் கடந்தஆண்டு வழங்கப்பட்டது. இது மேலும் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை கடன் மறுசீரமைப்புதிட்டங்களை பயன்படுத்தவில்லையெனில், இந்த புதிய 2.0 கடன் மறுசீரமைப்புக்கு அவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள். இதன் மூலம் 5-7 ஆண்டுகள் தவணைக்காலம் நீட்டித்துக்கொள்ளலாம். மேலும் தவணைத் தொகையை திரும்ப செலுத்துவதற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் பெறலாம். இந்த சலுகைகளை வரும் செப்.30-ம் தேதி வரை வங்கிகள் செயல்படுத்தும்.
மேலும் மாவட்டத்தில் கரோனாதொடர்பான சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக முன்னுரிமை கடன்கள் விரைந்து வழங்கப்படும். மருத்துவமனைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர் தயாரிப்பாளர்கள், கரோனா தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட மருந்து தயாரிப்பாளர்கள், முகக் கவசம், முழு உடல் கவச உடை தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து தொழில் முனைவோருக்கும் ரூ.50 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும், பிணையமின்றி ரூ. 2 கோடி வரை வங்கி விதிமுறைகளின் படி கடன் வழங்கப்படும்.
இதேபோன்று வீட்டுக் கடன், நுகர்வோர் கடன், வாகனக் கடன்,கல்விக் கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றுக்கு தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் குடும்பஉறுப்பினர்களுக்கும் வங்கி விதிமுறைகளின் படி குறைந்தபட்சம் ரூ. 25 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. எனவே இத்தகைய சலுகைகளை தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு விரைந்து வழங்க, மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கியாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு பிற கடன்களுக்கான மறுசீரமைப்பும் பரிசீலிக்கப்பட வேண்டும். தொற்று காலத்தில் கடந்த ஆண்டைப் போல, இந்த ஆண்டும் அதிக அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன்வழங்கவேண்டும். கடனை மீளப்பெறுவதில் கனிவான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். எந்தவித புகாருக்கும் இடம்தராமல் செயல்பட வங்கிகள் மற்றும் நுண் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதாரமுள்ள புகார்கள் மீதும் தொடர்புடைய நிறுவனங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT