Published : 16 Jun 2021 08:38 PM
Last Updated : 16 Jun 2021 08:38 PM
சட்டப்பேரவைக்குப் புதிய ரத்தம் பாய்ச்சி மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என தேநீர் விருந்தில் ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி மாலையில் சட்டப்பேரவை உறுப்பினர்களை வரவேற்று கவுரவிக்கும் விதமாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேநீர் விருந்து அளித்தார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, திமுக, சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலர் அஸ்வனி குமார், ஏடிஜிபி ஆனந்த மோகன் உள்ளிட்டேர் பங்கேற்றனர்.
இதில் ஆளுநர் தமிழிசை வரவேற்றுப் பேசியதாவது:
‘‘மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவது பெருமைக்குரிய ஒன்றாகும். மக்களின் நம்பிக்கையைப் பெற்றால்தான் வெற்றி பெற முடியும். மக்களின் நம்பிக்கையைப் பெற்று நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். மக்கள் பணிக்காக உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சட்டப்பேரவைக்குப் புதிய ரத்தம் பாய்ச்சி மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும். மக்களுக்கான அரசாக இது செயல்பட வேண்டும். புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் அனைத்துத் திறன்களும் உடைய மாநிலமாக இருக்கிறது. இதனை மிகச் சிறந்த மாநிலமாக மாற்ற இணைந்து பாடுபட வேண்டும்.
புதுச்சேரியைச் சிறந்த மாநிலமாக உருவாக்குவதற்கு என்னுடைய ஒத்துழைப்பு என்றென்றும் இருக்கும். மாநிலத்தின் நலன் கருதி நான் அரசுடன் இணைந்து செயல்படுவேன். தற்போது கரோனா சூழலில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முழுவதுமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாகப் புதுச்சேரியை மாற்ற வேண்டும். அப்போதுதான் 3-வது அலையை நாம் எதிர்கொள்ள முடியும்.’’
இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT