Published : 16 Jun 2021 06:16 PM
Last Updated : 16 Jun 2021 06:16 PM
இந்துக்களின் வழிபாடு எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் இந்து சமய அறநிலையத்துறை தலையிடலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி கோயிலில் இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், சட்டப்பேரவை திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வு முடியும் நேரத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, "திமுக தேர்தல் அறிக்கையில் 5 கோயில்களுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. "சொன்னதைத்தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்" என்பதற்கேற்ப சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில், திருச்சி உச்சி பிள்ளையார் கோயில், திருத்தணி முருகன் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் உள்ளிட்ட 5 இடங்களில் ரோப் கார் வசதி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 5 இடங்களிலும் நேரில் பார்வையிட்டு, சாத்தியக் கூறுகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதையொட்டி, 2-வது இடமாக இங்கு வந்துள்ளேன்.
இந்த திட்டம் மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு, பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் விரைவில் ரோப் கார் வசதி அமைப்பதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை முன்னெடுக்கும். பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நவீன தொழில்நுட்பத்துடன் ரோப் கார் வசதி அமைக்கப்பட்டுள்ளதுபோல், உலக அளவில் இதற்கான வரைபடம் உள்ளிட்ட திட்டத்தைத் தயாரித்து, ரோப் கார் வசதி செய்து தர முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.
ஆகம விதிகளில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடக் கூடாது என்று கருத்து கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, "இந்துக்களின் வழிபாடு எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் இந்து சமய அறநிலையத்துறை தலையிடலாம். சட்டம் 1956, உட்பிரிவு 1-ன்படி எங்கெல்லாம் கோயில் உள்ளதோ அங்கெல்லாம் அறநிலையத்துறை தலையிடலாம்" என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT