Published : 16 Jun 2021 05:16 PM
Last Updated : 16 Jun 2021 05:16 PM

சிமெண்ட் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

சென்னை

சிமெண்ட் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ''கரோனா ஊரடங்கு காலம் என்பதால் தொழில் துறையில் தேக்கம் நிலவுகிறது. ஊரடங்கு முடிந்தபிறகு தொழில் தொடங்கப் பலரும் முன்வருவர். புதிய தொழில்கள் தொடங்குவதற்கு ஏற்கெனவே சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஊடரங்கு முடிந்தபிறகு யாரெல்லாம் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு அரசிடம் அனுமதி கோரி இருக்கிறார்களோ அவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.

சிமெண்ட் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விலையைக் குறைப்பது தொடர்பாக சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சிமெண்ட் விலை உயர்வால் சாமானியர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் குறைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளோம்.

கீழடியில் ஏழாம் கட்ட ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்னதாக நானும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் நேரில் சென்று பார்வையிட்டோம். கீழடி அகழாய்வில் சில முக்கியப் பொருட்கள் கிடைத்துள்ளன. அவை தமிழரின் தொன்மையை, தமிழரின் நாகரிக வளர்ச்சியை 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய காலக் கணக்கீட்டுக்குக் கொண்டு செல்லும் வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் அவை குறித்த விவரங்கள் மக்களுக்கு அறிவிக்கப்படும்'' என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''தற்போதைய ஆட்சியில் கட்டுமானப் பொருட்களின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஜல்லி, மணல்என அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்து கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்க்கை அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது'' என்று குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x