Published : 16 Jun 2021 04:13 PM
Last Updated : 16 Jun 2021 04:13 PM
கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சசிகலா ஆடியோ அரசியல் செய்து வருவதாகவும், பிரித்தாளும் சூழ்ச்சியை முயல்வதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை, பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
''கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சசிகலா, எப்படி அதிமுகவைச் சொந்தம் கொண்டாட முடியும்? எப்படி அதிமுகவினரிடம் பேசமுடியும்? அரசியலை விட்டு ஒதுங்கிவிடுகிறேன் என்று அறிவித்தார். ஆனால், இப்போது ஆடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் எண்ணம் நிறைவேறாது. தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே 3 சதவீத வாக்கு வித்தியாசம்தான். பலம்மிக்க எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளோம். எங்களைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான். இதை சசிகலாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் ஆடியோ அரசியலைச் செய்து வருகிறார்.
ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு நாட்டைக் கைப்பற்றினர். அந்த வகையில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு எங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தி, அதன் மூலம் குளிர் காய்ந்து, கட்சியைப் பிடித்து விடலாம் என்று நினைத்தால் நிச்சயமாக அது நடக்காது.
அதிமுக தொண்டர்கள் விழிப்பாக உள்ளார்கள். தொண்டர்கள் எல்லோருக்கும் அவர்கள் எப்பேர்ப்பட்ட சூழ்ச்சிக்காரர்கள் என்று தெரியும். அந்த சூழ்ச்சி எந்த விதத்திலும் எடுபடப் போவதில்லை.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிக்கு செல்போன், பணத்துக்காகக் கொல்லப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணையின் அடிப்படையில் மருத்துவமனையின் தற்காலிக ஒப்பந்தப் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் தற்போது நோயாளிகளுக்குப் பாதுகாப்பு இல்லை.
தற்போதைய ஆட்சியில் கட்டுமானப் பொருட்களின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. கம்பிகளின் விலை ஒரு டன் 46 ஆயிரம் ரூபாய் என்று இருந்தது தற்போது 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஜல்லி, மணல், என அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்து கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்க்கை அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏழை மக்களால் வீடு கட்ட முடியவில்லை.
யாரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அதிமுக நீக்கியதில்லை. எனினும் கருத்துச் சுதந்திரத்துக்கும் ஓர் எல்லை உண்டு. வரம்பு மீறிப் பேசுவதைக் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான் புகழேந்தி நீக்கப்பட்டார்''.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT