Published : 16 Jun 2021 01:17 PM
Last Updated : 16 Jun 2021 01:17 PM

துரைமுருகன், காங்கிரஸ் எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குகள்: விரைவில் விசாரணை

துரைமுருகன்: கோப்புப்படம்

சென்னை

காட்பாடி தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், நீண்ட இழுபறிக்குப் பின்னர் வெற்றி பெற்றார். அவருக்கு அமைச்சரவையில் நீர்ப்பாசனம் மற்றும் கனிம வளத்துறை கொடுக்கப்பட்டுள்ளது..

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.ராமு, 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆரம்பம் முதலே காட்பாடி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், துரைமுருகன் 85,140 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளரான ராமு 84,394 வாக்குகள் பெற்றிருந்தார்..

இந்நிலையில், துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வி.ராமு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தன் மனுவில், தகுதியான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும், தேர்தல் நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை எனவும், தபால் வாக்குகளையும், மின்னணு வாக்குகளையும், மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

அதேபோல, தென்காசி தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.பழனி நாடார் வெற்றியை எதிர்த்து, அதிமுக சார்பில் போட்டியிட்டு 370 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்த செல்வமோகன்தாஸ் பாண்டியன் சார்பிலும் தேர்தல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது..

அவர் தன் மனுவில், தேர்தல் நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனவும், பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளதாகவும், குறிப்பாக, தபால் வாக்குகளையும் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்

எதிர்த்தரப்பு பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவித்து, தங்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என இருவரும் கோரியுள்ளனர்

இந்த இரு வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x