Published : 16 Jun 2021 10:53 AM
Last Updated : 16 Jun 2021 10:53 AM
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணை இன்று காலை திறக்கப்பட்டது.
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12 ஆம் தேதி காலை திறந்து வைத்தார். கல்லணைக்கு காவிரி நீர் இன்று (ஜூன் 16) அதிகாலை வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணை இன்று காலை 9.15 மணியளவில் திறக்கப்பட்டது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தலா 500 கன அடி வீதம் திறந்துவிடப்படுகிறது.
இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு (நகர்ப்புற வளர்ச்சி), எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண் துறை), எஸ்.ரகுபதி (சட்டத் துறை), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (பள்ளிக் கல்வித் துறை), மா. சுப்பிரமணியன் (மக்கள் நல்வாழ்வுத் துறை), சிவ.வீ.மெய்யநாதன் (சுற்றுச்சூழல் துறை), எஸ்.எஸ். சிவசங்கரன் (பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை), தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, செய்தியாளரிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், "கல்லணைக்கு தண்ணீர் வருவதைப் பொருத்து, காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகப்படுத்தப்படும்.
கல்லணையிலிருந்து தற்போது திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிக்குச் செல்ல 10 நாட்கள் ஆகும். தூர்வாரும் பணி இதுவரை 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தண்ணீர் சென்றடைவதற்குள் 100 சதவீத பணிகள் முடிவடைந்து விடும்.
இந்தப் பாசனத்தின் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.04 லட்சம் ஏக்கரும், திருவாரூர் மாவட்டத்தில் 89 ஆயிரம் ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 5,000 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 96 ஆயிரம் ஏக்கரும், கடலூர் மாவட்டத்தில் 16,000 ஏக்கரும் என, மொத்தம் 3.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT