Published : 16 Jun 2021 10:02 AM
Last Updated : 16 Jun 2021 10:02 AM
பொதுமக்களின் வாட்ஸ் ஆப் தகவல்களையும் மனுக்களாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என, விழுப்புரம் மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக பொறுப்பேற்ற மோகன் உறுதியளித்தார்.
விழுப்புரம் அட்சியராக பணியாற்றிய அண்ணாதுரை வேளாண்மைத்துறை இயக்குநராக பணிமாறுதல் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக பதவி வகித்த மோகன் இன்று (ஜூன் 16) காலை விழுப்புரம் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட மோகன், தஞ்சாவூர் தனியார் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்த பின்பு, காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் படித்து, பின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திம் எம்பிஏ பயின்றார்.
2005-ம் ஆண்டு குருப் 1 தேர்வில் தேர்ச்சிபெற்று காஞ்சிபுரம் துணை ஆட்சியராகவும், புதுக்கோட்டையில் வருவாய் கோட்டாட்சியராகவும், டாஸ்மாக் பொது மேலாளராகவும், சுற்றுலாவளர்ச்சித்துறை, பொது மரபுத்துறையில் பொது மேலாளராகவும், ஆளுநரின் துணை செயலாளராகவும், மதுவிலக்கு ஆயத்துறையின் பொது மேலாளராகவும், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இன்று விழுப்புரம் மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நேற்று முதல்வரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்க உள்ள ஆட்சியர்களுக்கு எப்படி பணியாற்ற வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது.
முதல்வரின் 7 அம்ச திட்டத்தை இம்மாவட்டத்தில் செயல்படுத்த முழு கவனம் செலுத்துவேன். 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக முடிவுகள் எடுக்கப்பட்டு, தீர்வு காணப்படும்.
திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சம்பிரதாயமாக இல்லாமல் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்படும். பொதுமக்கள் திங்கட்கிழமைகளில் என்னை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்.
இம்மாவட்டத்தை கரோனா இல்லாத மாவட்டமாக கொண்டுவர சுகாதாரத்துறையினர் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
என் மொபைல் எண்ணுக்கு எப்போதும் தொடர்புகொண்டு பேசலாம். வாட்ஸ் ஆப் மூலம் பெறப்படும் தகவல்களும் மனுக்களாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT