Published : 15 Jun 2021 09:02 PM
Last Updated : 15 Jun 2021 09:02 PM
கோவை மாவட்டத்தில் தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக சமூகச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக, கரோனா தொற்றுப் பரவலில் கோவை முதலிடம் பிடித்துள்ளது. பலவிதக் காரணங்களால் கடந்த சில மாதங்களாக கோவையில் கரோனா தொற்று தீவிரமாக இருந்தது. மாவட்டத்தில் இன்று (மே 15) மதியம் நிலவரப்படி இதுவரை ஏறத்தாழ 2.04 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 1.94 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்தின் சுகாதாரத் துறைகளின் சார்பில், பொதுமக்களிடம் இருந்து சளி, எச்சில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை அல்லது கரோனா சிகிச்சை மையங்களிலும், தாக்கம் குறைந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
குறையும் தொற்றுப் பரவல்
மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தினமும் சராசரியாக 3,500-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 4-ம் தேதி முதல் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்குக் கீழ் குறையத் தொடங்கியது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறையும் சூழலில், மாவட்டத்தில் தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பரிசோதனை குறைப்பு?
இது தொடர்பாக சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘அரசு மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை, தனியார் ஆய்வகங்கள் என மாவட்டத்தில் 22 மையங்கள் மூலம் தினமும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன்பு வரை தினமும் சராசரியாக 13 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி 11,601 பேருக்கும், 2-ம் தேதி 11,020 பேருக்கும், 4-ம் தேதி 8,303 பேருக்கும், 6-ம் தேதி 9,780 பேருக்கும், 7-ம் தேதி 9,692 பேருக்கும், 12-ம் தேதி 10,546 பேருக்கும், 14-ம் தேதி 7,618 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி 3,332 பேர், 2-ம் தேதி 3,061 பேர், 4-ம் தேதி 2,810 பேர், 9-ம் தேதி 2,319 பேர், 12-ம் தேதி 1,982 பேர், 13-ம் தேதி 1,895 பேர், 14-ம் தேதி 1,728 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய பரிசோதனை எண்ணிக்கையை ஒப்பிடும்போது, தற்போது மாவட்டத்தில் தினமும் சராசரியாக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் எண்ணிக்கையில் பரிசோதனைகள் குறைந்து வருகின்றன. பரிசோதனைகளை ஒப்பிடும்போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவருவது தெரியும். தொற்றாளர்களைக் குறைத்துக் காட்ட, பரிசோதனைகளை மாவட்ட நிர்வாகம் குறைத்துள்ளதோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.
பரிசோதனை குறைக்கப்படவில்லை
மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. சனி, ஞாயிறுகளில் தடுப்பூசி முகாம்கள் தொடர்பான பணியின் காரணமாக பரிசோதனை எண்ணிக்கை குறைந்து இருக்கலாம். மற்றபடி, தினமும் வழக்கமான எண்ணிக்கையில்தான் கரோனா பரிசோதனை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.
மாநகராட்சிப் பகுதியில் தொற்று அதிகம்
மாவட்டத்தில் இன்று மதியம் நிலவரப்படி, இதுவரை மொத்தமாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 53.25 சதவீதம் பேர் மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். புறநகரில் அதிகபட்சமாக சூலூரில் 8.70 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக வால்பாறையில் 0.44 சதவீதம் பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறும்போது, ‘‘கடந்த மாதம் நிலவரப்படி, கரோனா உறுதியாகி 27 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். தற்போது தொற்று குறைந்து வருவதால், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் தொற்று அதிக அளவில் உள்ளது. புறநகர்ப் பகுதிகளில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT