Last Updated : 15 Jun, 2021 07:37 PM

 

Published : 15 Jun 2021 07:37 PM
Last Updated : 15 Jun 2021 07:37 PM

அனுமதியில்லாமல் கட்டிடங்களைக் கட்டிவிட்டு வரைமுறைப்படுத்தக் கோருவதை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றம்

மதுரை

அனுமதியில்லாமல் கட்டிடங்களைக் கட்டிவிட்டு, பின்னர் அந்தக் கட்டிடங்களை வரைமுறைப்படுத்தக் கோருவதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாலவிக்னேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''பாளையங்கோட்டையில் ஏராளமான கல்லூரிகள், மத நிறுவனங்கள், பள்ளிகள், நெல்லை மருத்துவக் கல்லூரி, சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மத்திய சிறைச்சாலை போன்றவை உள்ளன. இப்பகுதியில் கட்டிடங்கள் தொடர்ச்சியாக அமைந்திருக்கும். இந்நிலையில் போதுமான சாலை வசதியில்லை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களைக் காரணம் காட்டி பல்வேறு வணிக நிறுவனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பாளை பகுதியைத் தொடர் கட்டிடப் பகுதியாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியாகவும் அறிவிக்க நெல்லை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது.

இருப்பினும் நகர் ஊரமைப்புத் திட்ட இயக்குநரகம் வணிக நிறுவனங்கள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநகராட்சித் தீர்மானத்தை ஏற்று பாளையைத் தொடர் கட்டிடப் பகுதியாகவும், பொருளாதாரத்தின் பின்தங்கிய பகுதியாகவும் அறிவித்தால் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க முடியும். எனவே, நகராட்சி தீர்மானத்துக்கு அனுமதி வழங்க நகர் ஊரமைப்புத் திட்ட இயக்குநரகத்துக்கு உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், ''நெல்லை மாநகராட்சித் தீர்மானம் அனுமதியில்லாமல் கட்டிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காத அளவில் உள்ளது. அனுமதியில்லாமல் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதைத் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்குப் போதிய பாதை வசதியில்லாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அனுமதியின்றிக் கட்டிடங்கள் கட்டிவிட்டு, பிறகு அதை வகைப்படுத்த அனுமதி கோருவதை ஏற்க முடியாது'' என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x