Published : 15 Jun 2021 06:45 PM
Last Updated : 15 Jun 2021 06:45 PM
மேட்டூர் அணை திறப்புக்கு வந்தபோது, கோரிக்கை மனு அளித்த பெண்ணுக்குத் தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி மேட்டூர் வந்தார். அப்போது, மேட்டூரில் அவரைச் சந்தித்த பி.இ (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்த ஆர்.சவுமியா என்ற பெண், பணி ஓய்வுபெற்ற தந்தை ராதாகிருஷ்ணனுடன் சொற்ப ஓய்வூதியத்தில் வசிப்பதாகவும், தனது கிராமத்தின் அருகே தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று கோரி மனு அளித்தார்.
கோரிக்கை மனு அடங்கிய கவரில், தனது 2 பவுன் தங்கச் சங்கிலியை வைத்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கரோனா நிதியாக வழங்குவதாகவும் சவுமியா குறிப்பிட்டிருந்தார்.
கோரிக்கை மனுவைப் படித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக வலைதளங்கள் மூலமாக, சவுமியாவைப் பாராட்டியதுடன், உரிய வேலைவாய்ப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர், மேட்டூரை அடுத்த பொட்டனேரியில் வசிக்கும் சவுமியாவின் வீட்டுக்கு இன்று (ஜூன் 15) நேரில் சென்று, அவரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, மேட்டூர் அருகே உள்ள ஜேஎஸ்டபிள்யு என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான பணி ஆணையை வழங்கினர்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் செல்போன் மூலம் தொடர்புகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாகப் பணிபுரிய வேண்டும் என்று சவுமியாவுக்கு வாழ்த்து கூறினார். அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆட்சியர் கார்மேகம், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோரும் சவுமியாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வரின் நடவடிக்கையால் கிடைத்த பணி குறித்த சவுமியா கூறுகையில், "மனு கொடுத்த 2 நாட்களில் முதல்வர் துரித நடவடிக்கை எடுத்து, எனக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மிகப்பெரிய மனிதரான முதல்வர், என்னிடம் செல்போனில் பேசி, வாழ்த்து தெரிவித்து, தந்தையின் உடல்நலன் குறித்து, அக்கறையோடு விசாரித்ததுடன், அவரை நல்லபடியாக கவனித்துக் கொள்ள வேண்டும். கிடைத்துள்ள பணியில் செம்மையாகப் பணியாற்ற வேண்டும் என்றார்.
மேலும், கரோனா நிவாரண நிதிக்காக, தங்கச் சங்கிலியை வழங்க வேண்டும் என எப்படித் தோன்றியது என்றார். எனது தாயை நோயினால் இழந்தவிட்ட நான், பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், கையில் பணம் இல்லாததால், செயினைக் கொடுத்தேன் என்றேன்.
முதல்வர் ஐயா, என்னிடம் பேசியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர் வழங்கியுள்ள பணியில் நேர்மையாகவும், திறமையாகவும் பணியாற்றி, முதல்வருக்கு நற்பெயர் சேர்ப்பேன். என்னைப் போல மேலும் பலருக்கு முதல்வர் உதவிட வேண்டும். முதல்வருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT