Published : 15 Jun 2021 06:38 PM
Last Updated : 15 Jun 2021 06:38 PM
கரோனா ஊரடங்கின்போது வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் சென்னை, சேத்துப்பட்டு சிக்னலில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆனந்தன், தலைமைக் காவலரான ரஜித்குமார் உள்ளிட்ட காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை வழிமறித்து விசாரணை செய்தனர். காரை ஓட்டிவந்த சட்டப்படிப்பு படிக்கும் மாணவி பிரீத்தி ராஜனிடமிருந்து ஓட்டுநர் உரிமத்தைப் பெற்று அபராத ரசீதைக் கொடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்தப் பெண் நடந்த விஷயத்தை வழக்கறிஞரான தன் தாயிடம் கூறி அங்கு வரவழைத்துள்ளார்.
அங்குவந்த அவரது தாயார் தனுஜா ராஜன், முகக்கவசம் இல்லாமல் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. ரசீதை வீசி எறிந்து இருவரும் கிளம்பிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதனையடுத்து தலைமைக் காவலர் ரஜித் குமார் அளித்த புகாரில் சேத்துப்பட்டு போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். கொலை மிரட்டல் விடுவது, அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுப்பது, பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவையும் சேர்த்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறை இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், தாய் மகள் இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஊரடங்கு விதிகளை மீறும் வழக்கறிஞர்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். மருத்துவம் மற்றும் காவல்துறையில் உள்ள முன்களப் பணியாளர்கள், உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருவதாகவும், பொதுமக்கள் அனைவரும் கரோனா பயத்தில் ஊரடங்கைக் கடைப்பிடிக்கும்போது, வழக்கறிஞர்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
வழக்கறிஞர் தனுஜாவிற்கு முன்ஜாமீன் அளித்தால் அரசு மருத்துவமனைக்கு நிவாரண நிதியாக ஒரு லட்ச ரூபாய் தர முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலைப் பிரதிவாதியாகச் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, ஊரடங்கில் வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT