Last Updated : 15 Jun, 2021 06:17 PM

 

Published : 15 Jun 2021 06:17 PM
Last Updated : 15 Jun 2021 06:17 PM

துப்பாக்கித் தொழிற்சாலை பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளில் தீவிரம் காட்டும் 'கர்னல்' குழு

லெப்டினன்ட் கர்னல் கே.கார்த்திகேஷ்

திருச்சி

துப்பாக்கித் தொழிற்சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளில் 'கர்னல்' தலைமையிலான குழுவினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையைக் காட்டிலும் 2-வது அலை மிகவும் வேகமாகப் பரவியது. ஒரு கட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை கிடைப்பது அரிதானது. இதனால் அவரசமான நேரத்தில், தேவையான அளவுக்கு ஆக்சிஜன் மற்றும் சிகிச்சை கிடைக்காததால் பலர் உயிரிழக்க நேர்ந்தது.

பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர்

இதுபோன்ற சூழல் திருச்சி மாவட்டத்திலும் பல இடங்களில் காணப்பட்ட நிலையில், நவல்பட்டு பகுதியிலுள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, துப்பாக்கித் தொழிற்சாலையின் பாதுகாப்புப் படையினரைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு குழு, தற்போது அங்கு மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் முழுவீச்சில் களமிறங்கி கரோனா தடுப்புப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அப்பகுதியில் தொற்றால் பாதிக்கப்படுவோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வது மட்டுமின்றி, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகளையும் இக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தனிக் கட்டுப்பாட்டு அறை

இதுகுறித்து, இக்குழுவை உருவாக்கி, ஒருங்கிணைத்துச் செயல்பட்டு வரும் துப்பாக்கித் தொழிற்சாலையின் பாதுகாப்பு அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் கே.கார்த்திகேஷ் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறியதாவது:

"கரோனா 2-வது அலை வேகமாகப் பரவிய கடந்த மாதத்தில் பொதுமக்களைப் போலவே, துப்பாக்கித் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காததால், தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் பல இடங்களைத் தொடர்புகொண்டு பேசினோம்.

சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை பேசி முயற்சி செய்த பிறகுதான் ஒவ்வொருவருக்கும் படுக்கை கிடைத்தது. எனவே, நாள் முழுவதும் இந்தப் பணியில் ஈடுபட்டாலும்கூட, ஓரிருவரைத் தவிர அனைவருக்கும் உதவி செய்ய முடியவில்லை.

எனவே, பொது மேலாளர் சஞ்சய் திவேரியின் அனுமதியுடன் பாதுகாப்புப் பிரிவில் பணிபுரியும் நபர்களைக் கொண்டு இதற்கென பிரத்யேகமாக ஒரு குழுவை உருவாக்கினோம். தனியாகக் கட்டுப்பாட்டு அறை அமைத்து, பணியாளர்கள் தொடர்பு கொள்வதற்காக 3 செல்போன் எண்களையும் அறிவித்தோம்.

மேலும், துப்பாக்கித் தொழிற்சாலை மருத்துவமனை, மாவட்ட நிர்வாகம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்புப் பணிகளை விரிவுபடுத்தினோம். இதன்மூலம் தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு ஒரு மணி நேரத்துக்குள்ளாக படுக்கை பெற்றுத் தரும் நிலை உருவானது.

64 பேரைக் காப்பாற்றியுள்ளோம்

அதன்பின், இங்கு பணிபுரியும் பணியாளர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள கிராம மக்களுக்கும் இச்சேவையை விரிவுபடுத்தினோம். இதன்படி, கடந்த 30 நாட்களில் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 70 பேரை திருச்சியிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்த்துள்ளோம்.

அவர்களுக்கான சிகிச்சையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். எனினும், அவர்களில் 3 பணியாளர்கள் உட்பட 6 பேர் இறந்துவிட்டனர். 64 பேரை உயிருடன் காப்பாற்றிவிட்டோம்.

தடுப்பூசி போட அழைப்பு

இப்போது கரோனா பரவும் விகிதம் குறைந்துவிட்ட நிலையில், இக்குழுவினரைத் தடுப்பூசி செலுத்தும் பணிக்குக் களமிறக்கியுள்ளோம். நடிகர் விவேக் மரணத்துக்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் சிறிது சுணக்கம் ஏற்பட்டதால், துப்பாக்கித் தொழிற்சாலையில் பணிபுரிவோரின் எண்களுக்கு தடுப்பூசியின் அவசியம் மற்றும் பாதுகாப்பு குறித்த குறுந்தகவல்கள், வீடியோக்களை அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

ஒவ்வொருவரின் எண்ணையும் தொடர்புகொண்டு பேசினோம். இதன் பலனாக, துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சார்ந்த 4,500 பேரில் இதுவரை 2,000 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இன்னும் ஒரு மாதத்துக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நிர்ணயித்துச் செயல்பட்டு வருகிறோம்.

இதுஒருபுறமிருக்க, பேருந்து வசதி இல்லாததால் இப்பகுதியிலுள்ள நவல்பட்டு, அண்ணாநகர், கும்பக்குடி, சூரியூர், பழங்கனாங்குடி உள்ளிட்ட கிராம மக்களும், துப்பாக்கித் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களும் திருச்சிக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் சிரமங்களைச் சந்தித்து வந்தனர்.

எனவே, அவர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளோம். இதன்படி, சுகாதாரத்துறை மூலம் நேற்று முன்தினம் மட்டும் 288 பேருக்குத் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்தோம். எங்களின் முயற்சிக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது.

இப்பகுதியைச் சேர்ந்த யாருக்கேனும் தடுப்பூசி தேவைப்பட்டால் 94895 34478 என்ற எண்ணில் எங்களின் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம்" என்றார்.

'கர்னல்' குழுவினரின் இச்சேவையை துப்பாக்கித் தொழிற்சாலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

'அரசு மருத்துவமனைக்கு ஆதரவுக் கரம்'

திருச்சி அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கர்னல் குழுவினரின் முயற்சியால் துப்பாக்கித் தொழிற்சாலை நிர்வாகம் தனது சமூகப் பங்களிப்பு நிதி (சி.எஸ்.ஆர்) மூலம் 20 சக்கர நாற்காலிகளைக் கடந்த மே 12-ம் தேதி வழங்கியது.

அதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பயன்படுத்த முடியாத நிலையில் கிடந்த படுக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள், சக்கர நாற்காலிகள், உணவு கொண்டும் செல்லும் ட்ராலிகள் உள்ளிட்ட தடவாளப் பொருட்களைக் கேட்டுப் பெற்று, வாங்கிச் சென்று துப்பாக்கித் தொழிற்சாலைப் பணியாளர்களின் உதவியுடன் அவற்றை சுமார் 2 வார காலத்துக்குள் சீரமைத்து மீண்டும் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x