Published : 15 Jun 2021 05:08 PM
Last Updated : 15 Jun 2021 05:08 PM

சிம்பு, ஹன்சிகா நடித்த படத்தை வெளியிடத் தடை கோரிய மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை

சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள 'மஹா' படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி இயக்குநர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் 'மஹா' என்ற படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். இப்படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் இயக்கினார்.

இந்நிலையில், தனது கதையை வைத்து, தனக்குத் தெரியாமல் படத்தை முடித்து, ஓடிடி தளத்தில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முயல்வதாகக் கூறி, படத்தை வெளியிடத் தடை கோரி இயக்குநர் ஜமீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், “கதைப்படி விமானப் பணிப்பெண்ணாக இருக்கும் கதாநாயகி ஹன்சிகா, பைலட் ஜமீலாக வரும் சிம்புவைக் காதலிக்கிறார். இவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுகிறது. அதைக் கதாநாயகி கண்டுபிடிப்பதுதான் கதை.

இந்தக் கதைக்குத் தேவையான காட்சிகளை எடுக்காமல் உதவி இயக்குநர் அஞ்சு விஜய் என்பவரை வைத்துப் படமாக்கியுள்ளனர். எனக்குத் தெரியாமல் படத்தை எடிட்டர் ஜான் ஆப்ரஹாம் மூலம் எடிட் செய்து, பின்னணிக் குரல் பதிவு செய்து படத்தை வெளியிட முயல்கின்றனர்.

படத்தை இயக்க 24 லட்சம் ரூபாய் ஊதியம் தருவதாக ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்துள்ளதால், மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், எனக்குத் தெரியாமல், எடுக்க வேண்டிய காட்சிகளை எடுக்காமல் படத்தை முடித்ததற்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர்கள் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இயக்குநருக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியில் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வழங்க தயாரிப்புத் தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, இயக்குநரும் அதை ஏற்றுக்கொண்டதாகவும், 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இயக்குநருக்கு வழங்கிவிட்டதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இயக்குநர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தை முடிவின் அடிப்படையில் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளைத் தயாரிப்பாளர் தரப்பில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேசமயம், பிரதான வழக்கில் எழுத்துபூர்வமான வாதத்தைத் தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 28-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x