Published : 15 Jun 2021 04:42 PM
Last Updated : 15 Jun 2021 04:42 PM
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் எவை எவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன, எவற்றை விண்ணப்பித்துப் பெற வேண்டும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்பட்டது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின. அதேபோல கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்தத் தேர்தலில் வேட்பாளர்களை அங்கீகரித்து அரசியல் கட்சிகள் வழங்கிய சான்றுகள், முடிவுகள் இன்னும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை எனக் கூறி, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், “தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வெற்றியை எதிர்த்துத் தேர்தல் வழக்குத் தொடர, 45 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த அவகாசம் ஜூலை 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்துத் தேர்தல் வழக்குத் தொடர, அவர்களை தங்கள் கட்சி வேட்பாளராக அங்கீகரித்து அரசியல் கட்சிகள் அளித்த சான்று மற்றும் முடிவுகள் குறித்த ஆவணங்கள் அவசியம் என்பதால் இந்த ஆவணங்களை ஜூலை 15 ஆம் தேதிக்கு முன் பதிவேற்றம் செய்யத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், “தேர்தல் தொடர்பான பல ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒருசில ஆவணங்களைச் சம்பந்தப்பட்டவர்கள் விண்ணப்பித்துப் பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், எந்த ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறித்தும், எந்தெந்த ஆவணங்கள் விண்ணப்பித்துப் பெற வேண்டும் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT