Published : 15 Jun 2021 11:49 AM
Last Updated : 15 Jun 2021 11:49 AM
27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையைத் தொடங்கலாம். 1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையைத் தொடங்கலாம். இதற்காக சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று தமிழகப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
1 முதல் 12ஆம் வகுப்பு வரை 2020-21ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவர்களுக்கு emis-போர்ட்டலில் தேர்ச்சி விவரங்களை உள்ளீடு செய்தல், 2021-22ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகள் தொடங்குதல் சம்பந்தமாக பள்ளிக் கல்வித்துறை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கை:
“2020-21ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வு மற்றும் 10,11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வாயிலாக அனைத்துவகை பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவும், மேற்படி பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி தேர்ச்சிப் பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இச்செயல்முறைகளை, உத்தரவுகளை அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கும் பின்பற்றி நடைமுறைப்படுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் உயர் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளதாலும், மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதால் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்குத் தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டியுள்ளதாலும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையைச் சுத்தம் செய்வது சார்ந்தும் மற்றும் கல்வித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது சார்ந்த அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்துத் தலைமையாசிரியர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஜூன் 14 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செய்தி வெளியீட்டில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான முழு ஊரடங்கில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் கட்டுப்பாடுகளுடன் கூடிய சில தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் மற்ற 27 மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கரோனா வைரஸ் நோய்த்தொற்று குறைந்துவரும் 27 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை அரசாணைப்படி எண் 273-ன்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கடந்த ஆகஸ்ட் 2020இல் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி உடனடியாக மேற்கொள்ளவும், பிற 11 மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று குறைவுக்குப் பின்னர் இப்பணிகளை மேற்கொள்ள உரிய அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரியவும் அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கோரி நடைமுறைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2021-22ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் அதே வழிமுறையைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விவரங்களைக் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (emis) பதிவு செய்வதற்கான வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் தேர்ச்சி விவரங்களை emis தளத்தில் உள்ளீடு செய்வதற்குத் தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் மூலமாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT