Published : 15 Jun 2021 03:13 AM
Last Updated : 15 Jun 2021 03:13 AM
நீலகிரி மாவட்டத்தில் வனக் குற்றங்களை கண்டறிய, ‘சிப்பிப்பாறை' இனத்தை சேர்ந்த இரு மோப்ப நாய்களுக்கு வனத்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் சேர்க்கப்பட்டுள்ளன.
65 சதவீத வனப் பகுதியைக் கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முதுமலை புலிகள்காப்பகம், முக்குருத்தி பூங்கா, நீலகிரி வனக் கோட்டம், கூடலூர் வனக் கோட்டம் ஆகிய வனப் பகுதிகள் உள்ளன. இங்கு காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உட்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
இந்நிலையில், வனக் கொள்ளை,வன விலங்குகள் வேட்டை ஆகியவற்றை தடுக்கும் பணியிலும், கண்காணிக்கும் பணியிலும் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையிலும், வனக் குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டறிவதற்காகவும் வனத்துறை சார்பாக சமீப காலமாக மோப்பநாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழக வனத்துறைக்கு முதன் முதலாக 2017-ம் ஆண்டு ஆஃபர் என்ற மோப்ப நாய் மத்தியப் பிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த இந்த நாய் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தது. இந்நிலையில், தற்போது சிப்பிப்பாறை ரகத்தைச் சேர்ந்த நாய்கள் நீலகிரி மற்றும் கூடலூர் வன கோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
நீலகிரி வனத்தில் சந்தனம், ஈட்டி மரங்களை வெட்டிக் கடத்துவது, வனப்பகுதிகளில் கஞ்சா பயிரிடுவது போன்ற சட்டவிரோத வனக் குற்றங்களை கண்டறியும் பொருட்டுபுலிகள் காப்பகங்கள், வனச் சரணாலயங்களில் மோப்பநாய்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற சிப்பிப்பாறை இனத்தை சேர்ந்த, ஆறு மாத வயதுடைய இரு நாய் குட்டிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. நீலகிரி வன கோட்டத்துக்கு, ‘காளிங்கன்' என பெயர் சூட்டப்பட்ட மோப்பநாயும், கூடலூர் வன கோட்டத்துக்கு‘அத்தவை' என பெயரிடப்பட்ட மோப்பநாயும் வழங்கப்பட்டுள்ளன.
மதுரை அருகே உள்ள வைகை வனத்துறை பயிற்சி கல்லூரியில் இந்த நாய்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பராமரிக்கவும் வனக் குற்றங்கள் ஏற்படும் இடங்களுக்கு அழைத்துச் சென்று குற்றவாளிகளைப் பிடிக்க எம்.சிவராஜ், கே.சதீஷ்குமார் ஆகிய இரு வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
வாகனங்களில் சோதனையிடுதல், சந்தனம், ஈட்டி மரங்களின் வாசனைகளை வைத்து கண்டறிதல், வனக் குற்றங்களை கண்டறியும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா கூறும் போது, ‘தமிழகத்தை தாயகமாக கொண்ட நாய்களை வனக் குற்றங்களைக் கண்டறியப் பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும். இவை பயிற்சிகளை சுலபமாக கற்றுக் கொண்டன. வனப் பாதுகாப்பில் கூடுதல் பலம் சேர்க்கின்றன’ என்றார்.
நீலகிரி வனக்கோட்டம் குந்தா சரகத்துக்குட்பட்ட கோத்திபென் வனக் குடியிருப்பு வளாகத்தில் மோப்ப நாய்களுக்கு தொடர்ந்து பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. முழுமையான பயிற்சி முடிய இன்னும் ஆறு மாத காலம் ஆகும் என்பதால், பயிற்சிக்குப் பின்னர் வனப்பாதுகாப்புப் பணிகளில் இவை ஈடுபடுத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT