Published : 14 Jun 2021 07:40 PM
Last Updated : 14 Jun 2021 07:40 PM
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் சீர்மிகு நகரத் திட்ட நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூன் 14) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் மழைநீர் தேக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு விதமான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, அம்பத்தூர் ஏரி மற்றும் கொரட்டூர் பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் கடந்த காலங்களில் அதிகப்படியான தண்ணீர் தேக்கம் இருந்துவந்தது.
இதனைக் கருத்தில் கொண்டு, தென்னக ரயில்வேக்குச் சொந்தமான இடத்தை மாநகராட்சியின் முயற்சியால் இலவசமாகப் பெற்று அங்கு 1,200 மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கால்வாயானது ஓட்டேரி நல்லா கால்வாயுடன் இணைக்கப்பட்டு, மழைநீர் தங்கு தடையின்றிச் செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை ககன்தீப் சிங் பேடி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆணையர் இந்தக் கால்வாயில் தண்ணீர் தங்கு தடையின்றிச் செல்ல ஏதுவாக அவ்வப்பொழுது தூர்வாரி சுத்தமாகப் பராமரிக்க உத்தரவிட்டார்.
அம்பத்தூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்ட ஆணையர், அருகில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் குட்டை போன்று நீர் தேங்கி அதில் பாசிகள் படர்ந்திருப்பதைக் கண்டு அவற்றை உடனடியாக அகற்றி கொசுப்புழுக்கள் உருவாகாத வண்ணம் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மண்டல அலுவலருக்கு உத்தரவிட்டார்.
பின்னர், ஆணையர் அண்ணாநகர் மண்டலம், வில்லிவாக்கம் ஏரி புனரமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த 2012-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வில்லிவாக்கம் பகுதியில் பெருமளவு மழைநீர் தேக்கம் இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் பராமரிப்பின்றி இருந்த வில்லிவாக்கம் குளம் புனரமைக்க மாநகராட்சியால் திட்டம் வகுக்கப்பட்டது. 36.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட வில்லிவாக்கம் குளமானது சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இதில், 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1 மீ. அளவுக்கு ஆழமிருந்த இக்குளமானது 5 மீ. அளவுக்கு தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளது. ஏரியைச் சுற்றிப் பக்கவாட்டுச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதை மற்றும் நிர்வாக அலுவலகப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. மேலும், இங்கு தொங்கும் பாலம், பறவைகள் தங்கிச் செல்ல ஏதுவாக சிறுசிறு திட்டுகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த ஏரியில் அருகில் உள்ள பகுதிகளில் மழைக் காலங்களில் மழைநீர் வடிகால்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் ஏரிக்குச் செல்லும் வகையில் இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதியில் மீதமுள்ள 11 ஏக்கர் பரப்பளவில் சென்னை பெருநகரக் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் அமைக்கப்படவுள்ள மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிப்பட்ட முழுவதும் குடிநீராகப் பயன்படுத்தக் கூடிய நீர் ஏரிக்குச் செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏரியில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பது உறுதி செய்யப்படும்.
வில்லிவாக்கம் ஏரியில் நடைபெற்று வரும் பணிகளைப் பார்வையிட்ட ஆணையர் ஏரியினைச் சுற்றி பசுமைப் பரப்பளவை ஏற்படுத்த மரம், செடி மற்றும் கொடிகளை அமைக்கவும், பக்கவாட்டுச் சுவர்களில் அழகிய படர்செடிகளை அமைக்கவும் உத்தரவிட்டார்கள். இந்த ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் பொதுமக்கள் இலவசமாக நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும்.
மேலும், தனியார் பங்களிப்புடன் நீண்டகால பராமரிப்பு அடிப்படையில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தவும் ஆணையர் உத்தரவிட்டார். தற்பொழுது நடைபெற்று வரும் ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட காலக்கெடுவினை நிர்ணயித்து விரைந்து முடிக்கவும் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஆணையர் தேனாம்பேட்டை மண்டலம், தியாகராய நகரில் பகுதி சார்ந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மாம்பலம் கால்வாய் மறுசீரமைப்புப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாம்பலம் கால்வாயில் 5.5 கி.மீ. நீளத்திற்கு சீர்மிகு நகரத் திட்ட நிதியின் கீழ் சீரமைப்பு பணிகள் 10 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதில், ஜி.என்.செட்டி சாலையில் நடைபெற்று வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பணிகளை வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும், இந்தக் கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் இப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்".
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT