Published : 14 Jun 2021 06:18 PM
Last Updated : 14 Jun 2021 06:18 PM
தமிழகத்துக்கு வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் என்று ஓசூர் டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக ஓசூர் எல்லையான ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் இ- பாஸ் இல்லாத அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு, அவற்றைத் திருப்பி அனுப்பும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கரோனா எதிரொலியாகக் கடந்த மே மாதம் 24-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு சில தளர்வுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் செய்யப்பட்டு வரும் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தமிழக ஓசூர் எல்லையில் ஏற்கெனவே இருந்து வந்த இ-பாஸ் முறை மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் இதர வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் இன்றி வரும் வாகனங்களைச் சோதனையிட்டுத் திருப்பி அனுப்பும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓசூர் ஜுஜுவாடியில் நடைபெற்று வரும் இந்த வாகன சோதனையை, ஓசூர் டிஎஸ்பி முரளி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் இ-பாஸ் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. இ-பாஸ் உள்ள வாகனங்களை மட்டும் தமிழகத்துக்குள் செல்ல அனுமதி வழங்குகிறோம். இ-பாஸ் இல்லாத இதர வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேலும், தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படும் வாகனங்களில் வருபவர்களுக்கு சுகாதாரப் பணியாளர்கள் மூலமாக சானிடைசர் வழங்கி, கைகளைச் சுத்தப்படுத்தும் பணியும், தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடல் வெப்பம் அளவீடு செய்யும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. பின்பு வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகளுக்குப் பிறகே தமிழகத்துக்குள் செல்ல வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது'' என்று டிஎஸ்பி முரளி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT