Published : 14 Jun 2021 04:20 PM
Last Updated : 14 Jun 2021 04:20 PM

கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்? - வேலூர் மாவட்ட ஆட்சியர் கடிதம்

பிரதிநிதித்துவப் படம்

வேலூர்

தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலையில் தொற்று பாதிக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, உடனிருக்கும் பெற்றோர், பாதுகாவலருக்கு கரோனா சிறப்பு உணவுடன் படுக்கை உள்ளிட்ட வசதிகளை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அரசின் முதன்மை செயலாளருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கோரிக்கை வைத்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை பாதிப்பில் இருந்து பொதுமக்கள் மெல்ல மீண்டு வருகின்றனர். அதற்குள் மூன்றாம் அலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் மூன்றாம் அலையை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாகவும், தமிழகத்தில் அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய 34 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அரசின் முதன்மை செயலாளர் இறையன்பு-வுக்கு அனுப்பியுள்ளார்.

அதில், "வேலூர் மாவட்டத்தில் முதல் அலையில் அதிகபட்சமாக ஒரு நாள் தொற்று பாதிப்பு 260 என்றிருந்தது. இரண்டாம் அலையில் அது 760 ஆக மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. மாவட்டத்தில் இரண்டாம் அலை தொடங்கிய இரண்டு மாதத்தில் மட்டும் மொத்தம் 23,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 14 வயதுக்குள் 790 பேர், 15-18 வயதுக்குள் 499 பேர், 19-30 வயதுக்குள் 4,746 பேர், 31-40 வயதுக்குள் 5052 பேர், 41-50 வயதுக்குள் 4,409 பேர், 51-60 வயதுக்குள் 4,122 பேர், 61-70 வயதுக்குள் 2,728 பேர், 70 வயதுக்கு மேல் 1,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படும்போது, 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் தொற்று பாதிப்பு குறைவானவர்களை கரோனா பராமரிப்பு மையத்திலும், மற்றவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். இதற்காக, கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்தி பின்னாளில் அந்த படுக்கைகளை அரசு மாணவர் விடுதிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மருத்துவமனையில் 60 சதவீத படுக்கைகள் நிரம்பியதும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து, மருத்துவ நிபுணர்களின் அறிவுரையை பெற வேண்டும். தொற்று பாதித்த குழந்தைகளுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இருக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு படுக்கை, தலையணை, பிரஷ், பேஸ்ட், சோப்பு உள்ளிட்ட தொகுப்பை வழங்க வேண்டும்.

தற்போது, கரோனா நோயாளிகளுக்கு மட்டும் கரோனா சிறப்பு உணவு வழங்கப்படும் நிலையில், மூன்றாம் அலையில் குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர், பாதுகாவலர்களுக்கும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசின் உதவித்தொகை வழங்குவது போல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து இணைநோயால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் நல புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் உருமாற்றம் அடையும் கரோனாவின் மரபணு வரிசை கண்டறிந்து, அதன் பரவலை கட்டுப்படுத்துகின்றனர். இந்த ஆய்வக வசதியை தமிழகத்தில் புதிதாக ஏற்படுத்த வேண்டும்.

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இந்த ஆய்வக வசதி இருந்தாலும், அங்கு ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதிக்கவில்லை. எனவே, இந்த ஆய்வை நடத்த மத்திய அரசு உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிஎம்சி மருத்துவமனை அறிக்கையின் அடிப்படையில் குழந்தைகளை பாதிக்கும் மூன்றாம் அலையில் சிகிச்சைக்கு தேவைப்படும் intravenous immunoglobulin G என்ற ஊசியை அதிகம் இருப்பு வைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு விநியோகிக்க வேண்டும்.

இந்த ஊசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். ஒரு ஊசியின் விலை ரூ.12 ஆயிரம் என்பதால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைகளுக்கு 5 ஊசிகள் தேவைப்படும்.

மாவட்டங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் கூடுதலாக ஒரு பரிசோதனை மையத்தை அரசு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், வேலூர் மாவட்டத்தில் மூன்றாம் அலையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "வேலூர் மாவட்டத்தில் மூன்றாம் அலையை எதிர்கொள்ள 915 ஆக்சிஜன் ப்ளோ மீட்டர், 660 எண்ணிக்கையில் டி-வகை ஆக்சிஜன் சிலிண்டர் கூடுதலாக தேவைப்படுகிறது.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 16 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் விநியோக கட்டமைப்பு, குடியாத்தம் மற்றும் வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனைக்கு தலா 4,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் விநியோக கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். பயன்பாட்டில் உள்ள ஆக்சிஜன் வசதி இல்லாத 555 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் விநியோக கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்,

குழந்தைகளுக்காக 1,000 பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 500 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள், குழந்தைகளுக்காக 200 எண்ணிக்கையில் படுக்கைகள், பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கவும் பாலூட்டும் தாய்மார்கள் உடனிருந்து கவனித்துக்கொள்ளும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x