Published : 14 Jun 2021 02:28 PM
Last Updated : 14 Jun 2021 02:28 PM
கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியதால், கரோனா தொற்று முழுமையாகக் குறையும் வரை அவரை வேறு பணிக்கு மாற்ற வேண்டாம் எனத் தஞ்சாவூர் மாவட்டப் பொதுமக்கள் முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக ம.கோவிந்தராவ் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதும் உள்ளாட்சித் தேர்தல், அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு ஆகியவற்றைச் சிறப்பாக நடத்தி முடித்தார். அதே போல் 2020-ம் ஆண்டு நிரவி புயல், 2021-ம் ஆண்டு ஜனவரியில் பெய்த வரலாறு காணாத மழை ஆகியவற்றில் விவசாயிகளுக்கு ஆறுதலாக இருந்து, உரிய நிவாரணத்தைப் பெற்றுத் தந்தார்.
இந்நிலையில் கரோனா முதல் அலையிலும், இரண்டாவது அலையிலும் சிறப்பாகப் பணியாற்றி அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவை தமிழக குடிசை மாற்று வாரிய இயக்குநராக மாற்றி நேற்று, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டார்.
இதற்குத் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து நசுவினிஆறு படுக்கை அணை, விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கத் தலைவர் வீரசேனன் கூறும்போது, ''தஞ்சாவூர் மாவட்ட வளர்ச்சிக்குப் பல்வேறு வகையில் சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், கரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின்போது சிறப்பாகப் பணியாற்றி அரசின் உயர் அதிகாரிகள், அமைச்சர்களிடமும் பாராட்டைப் பெற்றார். ஆனால் திடீரென மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டுள்ளார்.
அரசு அதிகாரிகள் மாற்றம் என்பது விதிமுறைகளில் இருந்தாலும், இந்த கரோனா தொற்றுக் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றி கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு முயற்சியோடு அவஎ பணியாற்றி வருவதால், இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்தும் காலம் வரையாவது ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டாம். இதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
மானாவாரி பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் வேங்கை து.வைத்திலிங்கம் கூறும்போது, ''கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இரவு பகலாகப் பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சியரை, தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இடமாற்றம் செய்ய வேண்டாம். புதிய ஆட்சியர் வந்து பொறுப்பேற்று சூழ்நிலையை உணர்ந்து நடவடிக்கை எடுப்பதற்குள் கரோனா அதிகமாகப் பரவும் நிலை ஏற்படும் என்பதால், கரோனா காலம் முடியும் வரை, கோவிந்தராவைத் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே பணியாற்ற தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT