Published : 14 Jun 2021 12:30 PM
Last Updated : 14 Jun 2021 12:30 PM
போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக் கூடாது என்பதாலேயே மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில், இன்று (ஜூன் 14) முதல் வரும் 21-ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களைத் தவிர 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படும் என அந்தத் தளர்வுகளில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, டாஸ்மாக் மதுபானக் கடைகளை இச்சூழலில் திறப்பது தொற்று பாதிப்பை அதிகப்படுத்தும் என்றும், மதுபானக் கடைகளைத் திறக்கக் கூடாது என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
இந்நிலையில், இன்று அரசு அறிவித்தபடி கரோனா கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரசு அறிவித்துள்ள கரோனா கால ஊரடங்கு தளர்வு வழிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், "பல்வேறு விமர்சனங்கள் வரும் என்கிற நிலையிலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசு கவனமாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இயங்கும்.
கரோனா காலக் கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்த நேரத்திலும் இந்தத் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்கிறேன். கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும். காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே கட்டுப்பாட்டோடு நடந்துகொள்கிற மக்களாக நம் தமிழக மக்கள் மாறவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT