Published : 20 Dec 2015 01:20 PM
Last Updated : 20 Dec 2015 01:20 PM

எருமைகள் விருத்தி அடைய வேண்டி தோடர்கள் கொண்டாடும் ‘மொற் பர்த்’பண்டிகை

நீலகிரி மாவட்டத்தில் குரும்பர், இருளர், காட்டு நாயக்கர், பனியர், தோடர், கோத்தர் ஆகிய 6 பண்டைய பழங்குடியினர் வசிக்கின்றனர்.

உதகை மற்றும் சுற்று வட்டாரம் உட்பட மாவட்டத்தில் 65 மந்துகளில் (வசிப்பிடங்கள்) 3 ஆயிரம் தோடரின மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் மொழி, உடை, பாவனைகள் வித்தியாசமானவை.

தோடரின மக்களின் முக்கிய அங்கமாக வகிப்பது எருமைகள். கால்நடை பராமரிப்பாளர்களான இவர்கள், பால் பொருட்களை உட்கொள்ளும் சைவர்கள். தங்க ளின் அனைத்து இறை வழிபாடுகள் மற்றும் விசேஷங்களில் எருமை களுக்கு முதலிடம் அளிக்கின்றனர். அத்தகைய எருமைகள் விருத்தி அடைய வேண்டும், தங்கள் வாழ்வு வளம் பெற வேண்டும் என வேண்டி, மார்கழி மாதம் இவர்கள் கொண்டாடும் பண்டிகை ‘மொற் பர்த்’.

ஆண்களுக்கு மட்டுமே அனுமதி

பண்டிகை நாளில், தலைமையிடமான உதகை தலைகுந்தா அருகே முத்தநாடு மந்தில் அனைவரும் கூடி கொண்டாடுவர். இங்குள்ள பழமை வாய்ந்த கூம்பு கோயில் (மூன்போ) மற்றும் ஓடையாள்போ கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.

கோயில் வளாகத்துக்குள் செல்ல ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளதால், பாரம்பரிய உடை அணிந்து மண்டியிட்டு வழிபடுவார்கள்.

ஆண்கள் வழிபாடு முடிந்ததும், பெண்களும் கொண்டாட்டத்தில் இணைவார்கள். பாரம்பரிய பாடல் களை பாடியபடி, ஆண்களும், பெண்களும் நடனமாடுவர். இதைத்தொடர்ந்து, இளைஞர்கள் தங்கள் இளமையை நிரூபிக்கும் வகையில் இளவட்ட கற்களை தூக்குவர். பால், நெய், இனிப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக விருந்தை, விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் பெண்கள் வழங்குவர்.

முதியோர்களிடம் ஆசி

விழா நிறைவடைந்ததும், பிரியா விடைபெறும் தோடரின பெண்கள், முதியவர்களின் பாதங் களைத் தொட்டு வணங்க, தங்களின் முறைப்படி வலது காலை தூக்கி அந்த பெண்களின் தலை மீது வைத்து ஆசிர்வாதம் செய்வர்.

இதுதொடர்பாக தோடரின மக்களின் தலைவர் மந்தேஸ் குட்டன் கூறும்போது, “நோயற்ற வாழ்வு வாழவும், எங்கள் எருமைகள் விருத்தி அடையவும் முத்தநாடு மந்தில் உள்ள எங்கள் இறைவனை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்துவோம். இந்த விழா தொடங்கப்பட்ட பின்னரே, பிற மந்துகளில் மற்ற விசேஷங்கள் தொடங்கும்.

இந்த ஆண்டு, டிச. 20-ம் தேதி (இன்று) ‘மொற் பர்த்’ பண்டிகை நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகிறது” என்றார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x